மதுராந்தகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இதற்காக ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள சுமார் 45 ஏக்கர் நிலத்தில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை அமைச்சர் என்.ஆனந்த் முன்னின்று கவனித்து வந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் நின்று பேசுவதற்காக பிரசார பஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை அமையும் இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு கியூஆர் குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மதியம் 1 மணிக்கு அனுமதிக்கப்பட இருப்பதாக அந்த அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அருகே உள்ள பகுதியில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமருவதற்காக இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. அதனை தொடர்ந்து பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு பிஸ்கட், மிக்சர் பாக்கெட், தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில் ஆகியவை கொண்ட தொகுப்பு அனைத்து இருக்கைகளின் மேல் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் பேசும்போது, பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் எளிதாக கண்டுகளிக்கும் வகையில் பக்கவாட்டு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.
பொதுக்கூட்ட பந்தலின் முகப்பு தோற்றம் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் த.வெ.க. கொள்கை தலைவர்களின் படங்கள் இடம் பெற்று உள்ளன.
முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் வருகை அதிகரித்தது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் காரில் சாலை மார்க்கமாக செல்கிறார்.
முதலமைச்சர் செல்லும் சாலைகளில் அவரை பார்ப்பதற்காக பொதுமக்கள் வருவார்கள் என்பதால் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இரும்பு தடுப்புகளுக்கு பின்னால் நின்று பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel