தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும், இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. இதனால் பள்ளியின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.
இதேபோல், இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, பள்ளிக்கு வரும் சிறுவர், சிறுமியர்கள் தேங்கியுள்ள மழைநீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இடிந்து விழுந்த பள்ளியின் சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்கவும், இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, அப்பகுதியில் மணல் கொட்டி சமப்படுத்துவதுடன், முறையான மழைநீர் வடிகால் வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.