2,000 எனர்ஜி டிரிங்க் கேன்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த ஹங்கேரி நாட்டு இளைஞர்!
ஒரு வெப்பமான கோடை நாளில் தாகத்தை தணிக்க வாங்கிய ஒரு சாதாரண பானம், இன்று உலக சாதனையாக உருவெடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கெர்கோ போர்பேலி என்பவர், உலகின் மிகப்பெரிய எனர்ஜி டிரிங்க் கேன்கள் சேகரிப்பிற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு, கெர்கோ போர்பேலி ஹங்கேரியில் உள்ள டெப்ரெசென் நகரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் கடுமையான வெயிலின் காரணமாக, அருகிலிருந்த கடையில் குளிர்ந்த பானம் தேடியபோது 'ஹெல்' என்ற எனர்ஜி டிரிங்க் மட்டுமே கிடைத்தது. அதுவரை எனர்ஜி டிரிங்க் குடித்திராத கெர்கோ, அதை வாங்கிப் பருகினார். அந்தச் சுவை அவருக்குப் பிடித்துப்போகவே, பிற பானங்களையும் சுவைக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் காலி கேன்களைக் குப்பையில் போடவே திட்டமிட்டார். ஆனால், விடுதி அறையின் வெறும் அலமாரிகளை அழகாக அலங்கரிக்கலாம் என்ற எண்ணத்தில், ஒவ்வொரு பானத்திலும் ஒரு கேனை மட்டும் அலமாரியில் வரிசையாக அடுக்கி வைத்தார். 15 கேன்களுடன் தொடங்கிய இந்த எளிய முயற்சி, நாளடைவில் அவரது வாழ்நாளின் மிகப்பெரிய பொழுதுபோக்காக மாறியது.
கல்லூரி படிப்பின் போது நள்ளிரவு நேரங்களில் விழித்திருந்து படிக்க கெர்கோவிற்கு இந்த பானங்கள் பெரும் உதவியாக இருந்தன. 2010 இல் ருமேனியா நாட்டிற்குச் சென்றபோது, அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் புதிய வகை கேன் ஒன்றை வாங்கி தனது சேகரிப்பை 20 ஆக உயர்த்தினார். பின்னர் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது, உலகளாவிய சேகரிப்பாளர்களின் தொடர்புகள் கிடைத்தன.
இதில், 1994 ஆம் ஆண்டைச் சேர்ந்த 'செம்டெக்ஸ்' என்ற பழமையான கேன், 1990-களில் வெளியான மைக்கேல் ஜாக்சன் மிஸ்டரி வரிசையின் 8 பதிப்புகள். தற்போது வரைபடத்தில் இல்லாத முன்னாள் யூகோஸ்லாவியா நாட்டில் தயாரிக்கப்பட்ட 'குவாரானா' கேன். ஜப்பானில் கிடைத்த 'ஏலியன்' என்ற பானம், இது கேனுக்குப் பதிலாகக் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டது. இவற்றில், தனது தேனிலவின் போது ஜப்பானில் வாங்கிய 'செயின்சா மேன்' தீம் கொண்ட கேன் மற்றும் உள்ளமைக்கப்பட்ட உறிஞ்சுகுழல் வசதி கொண்ட 'ரஸ்தா மான்ஸ்டா' ஆகியவை இவரது மனதிற்கு மிக நெருக்கமானவையாகும்.
2,000 கேன்களைப் பாதுகாப்பாக வைப்பது கெர்கோவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தற்போது தனது வீட்டின் மேல்தளத்தில் உள்ள பொழுதுபோக்கு அறையில் இவற்றை வைத்துள்ளார். இதில் சுமார் 900 கேன்களை வீட்டின் சரிவான கூரையில் சிறப்பு ஒட்டுநாடாக்களைப் பயன்படுத்தி தொங்கவிட்டுள்ளார். எஞ்சியவை அலமாரிகளில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சேகரிப்பில் உள்ள பெரும்பாலான சாதாரண கேன்களின் மதிப்பு குறைவு என்றாலும், பழமையான மற்றும் அரிதான கேன்களின் காரணத்தால், இந்த முழுச் சேகரிப்பின் சந்தை மதிப்பு சுமார் 10,000 முதல் 35,000 யூரோக்கள் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிட்டபோது, "உலகிலேயே நம்மிடம் தான் அதிக கேன்கள் இருக்குமோ?" என்ற கேள்வி கெர்கோவிற்கு எழுந்தது. அப்போது, தனது மகள் என்றாவது ஒரு நாள் கின்னஸ் புத்தகத்தைப் படிக்கும் போது, அதில் தனது தந்தையின் படத்தைப் பார்த்துப் பெருமைப்பட வேண்டும் என்ற எண்ணமே இவரை கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கத் தூண்டியது. ஒவ்வொரு கேனையும் தனித்தனியாகப் புகைப்படமெடுத்து, வரிசைப்படுத்தி, அதன் விவரங்களைப் பட்டியலிடுவது எளிதான காரியமாக இருக்கவில்லை. நூற்றுக்கணக்கான மணிநேர உழைப்பு இதற்குத் தேவைப்பட்டது. இரவு நேரத்தில் குழந்தை தூங்கிய பிறகு, மனைவியின் முழு ஆதரவோடு இந்த ஆவணப்படுத்தும் பணியை நிறைவு செய்தார்.
கடின உழைப்பிற்குப் பிறகு, கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரது சாதனையை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கியது. இது தன் சேகரிப்பின் முடிவல்ல, ஒரு முக்கியமான மைல்கல் மட்டுமே என்று கூறும் கெர்கோ, எதிர்காலத்தில் இந்த அரிய சேகரிப்புகளைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற புதிய கனவோடு பயணத்தைத் தொடர்கிறார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel