நேபாளத்தின் ஆழமான ஏரியான ஷே போக்சுண்டோவிற்கு செல்வதற்காக மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து காணாமல் போயினர்.
காணாமல் போனவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அவர்கள் டோல்போ புத்தா கிராமப்புற நகராட்சியின் 4 மற்றும் 8 ஆம் வார்டுகளிலிருந்து ஷே போக்சுண்டோ ஏரியை நோக்கிப் பயணம் செய்து கொண்டொண்டிருந்தனர்.
அவர்கள் கடைசியாக ஷே போக்சுண்டோ கிராமப்புற நகராட்சியின் 4 மற்றும் 8 ஆம் வார்டுகளுக்கு இடையேயுள்ள நும்லா கணவாய் மற்றும் பக்லா கணவாய் பகுதிகளில் காணப்பட்டனர்.
அங்கு அலைபேசி இணைப்பு வசதி இல்லை. எனவே, சுற்றுலாப் பயணிகள் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிவது கடினமாக உள்ளது.
வங்காள விரிகுடாவில் 'அர்னாப்' புயலின் தாக்கத்தால் இமயமலை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் பனியில் சிக்கியிருக்கலாம் என உள்ளூர் வழிகாட்டிகள் சந்தேகிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் தோ பகுதியிலிருந்து போக்சுண்டோ ஏரிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சிக்கலில் மாட்டிக்கொண்டதாக டோல்பா மாவட்டத் தலைமை அதிகாரி ஜூனு ஹமால் உறுதிப்படுத்தினார்.
மோசமான வானிலை மற்றும் மலைப்பகுதியில் நிலவும் அபாயகரமான சூழல் குறித்து உள்ளூர்வாசிகள் எச்சரித்த போதிலும், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாக அவர் கூறினார்.
ஆறு இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்பை இழந்துள்ளதாக டோல்பா காவல் துணை கண்காணிப்பாளர் அனில் ராஜ் கிரி தெரிவித்தார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட முகமையிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இமயமலையின் உயரமான பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன.
காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணிகளுக்கு உதவுவதற்காக, நேபாள ராணுவக் குழு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாக அலுவலகத்தின்படி, அப்பர் டோல்பா பகுதிக்கு மொத்தம் 244 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இவர்களில், 149 பேர் நேபாள நாட்டவர், 44 பேர் சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 51 பேர் பிற வெளிநாட்டுக் குடிமக்கள் ஆவர்.
மோசமான வானிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகள் அபாயகரமான பகுதிகளை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.