Tamil News & polling
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேருவுக்கு எதிராக நமபிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, 'எதிர்க்கட்சியினர் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் பரிசீலனையில் உள்ளது. அதை இன்று எடுத்துக்கொள்ள முடியாது' என்று கூறினார்.
இதையடுத்து சபாநாயர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு வழங்கப்படுமா? என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நாங்கள் அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும். ஒரு கட்சி வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
சேருகின்ற வாக்குகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எதிரிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து உள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் முதல் கட்டமாக பா.ஜ.க. எங்களுடன் இணைந்திருக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்திருக்கிறது. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கிறது.
ஆனால் எந்த கட்சிகள் வரும் என்பதை வெளியில் சொல்ல முடியாது. சிலவற்றை தான் வெளியில் சொல்ல முடியும்.
அ.தி.மு.க. எங்கள் கட்சி. நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதற்கு தி.மு.க.வினர் ஏன் எரிச்சல் படுகிறார்கள். ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள்? இன்றைக்கு அவர்களுக்கு பயம் வந்து விட்டது.
அ.தி.மு.க. ஒரு பிரதான கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி. பொன்விழா கண்ட கட்சி. எங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். நாங்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது.
நீங்கள் ஏன் எரிச்சல் படுகிறீர்கள். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்கள் இஷ்டம். இவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள், அவருடன் கூட்டணி வைத்தால் வர மாட்டீர்கள் என்கிறார்கள். இதை சொல்ல தி.மு.க. வினருக்கு அருகதை இல்லை. இதை மக்கள் முடிவு செய்வார்கள். வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அரசு என்று அமித்ஷா சொல்லவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் ஆட்சியில் பங்கு என்று அவர் சொல்லவில்லை. ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது.
டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு என்னுடைய பெயரை சொல்லி அமித்ஷா சொன்னார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி நீங்கள் ஏதேதோ கண்டு பிடிக்கும் வேலையை விட்டு விடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
தி.மு.க.வை வீழ்தத வேண்டும் என்று ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என்றுதான் அமித்ஷா கூறினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் கூட்டணி அல்ல. ஆட்சியில் பா.ஜ.க.வினருக்கு பங்கு என கூறவில்லை.
சட்டசபையில் இன்று சட்டமன்ற பேரவை விதி 72-ன் கீழ் அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையை தெரிவிக்கும் தீர்மானத்தை அ.தி.மு.க. சார்பாக நாங்கள் கொண்டு வந்தோம். அது குறித்து அவையில் பேசுவதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். அதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன், சகோதரருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இடங்கள், இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் 7.4.25 அன்று மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியதுடன், சோதனைக்கு பின்பு மேல் விசாரணை நடத்தி 11.4.2025 அன்று விளக்கமான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கும் போது அளித்த உறுதி மொழியை மீறி இந்து மதத்தை பற்றியும், பெண்கள் பற்றியும் அவர் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அவதூறாக பேசியது, அமைச்சர் பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறிய செயலாகும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனம் மற்றும் கடைகள் தனியார் மதுபான ஆலைகளில் மத்திய அமலாக்கத்துறை 6.3.2025 அன்று சோதனை நடத்தியது. முதல் கட்டமாக ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே இந்த காரணங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாங்கள் கடிதம் கொடுத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்ற போது அதை அப்போதைய சபாநாயகர் அனுமதி கொடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேற்கோள் காட்டி நாங்கள் பேசினோம். எங்களுக்கு அனுமதி கொடுக்க மறுத்த காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் மக்களிடம் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அமலாக்கத்துறை பல்வேறு துறைகளில் சோதனை நடத்தி இந்த துறையில் இவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்று செய்தி வெளியிடுகிறது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் வெளியிடப்படுகிறது.
ஒரு அமைச்சர் இந்து மதத்தை புண்படுத்துகிற விதமாகவும், பெண்களை இழிவுபடுத்துகின்ற விதமாகவும் பேசி இருக்கிறார். இதெல்லாம் முக்கிய பிரச்சனைகளாக இந்த ஆட்சிக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அவையில் விவாதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி கொடுக்கவில்லை. இதை விளக்குவது அரசின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress