பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

வேலூர்,

வேலூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பதும், திருமணம் ஆகாததும் தெரிய வந்தது. சிறுமியின் பெற்றோர் அந்த கருவை கலைக்கும்படி மருத்துவர்களிடம் வற்புறுத்தினர்.


இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேற்பார்வையாளர் திவ்யா அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அருகில் உள்ள நேமந்தபுரத்தை சேர்ந்த சஞ்சயை (19 வயது) மாணவி காதலித்து வந்ததும், கடந்த மாதம் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் வீட்டுக்கு சென்றபோது குளிர்பானம் கொடுத்ததாகவும், அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விட்டதாகவும், அந்த நேரத்தில் சஞ்சய் பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதும் தெரிய வந்தது.


இதுகுறித்து திவ்யா வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சஞ்சயை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel