Tamil News & polling
உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடியாட்சி முறையிலிருந்து மாறி குடியரசு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். குடியரசு அல்லது மக்களாட்சியின் முக்கிய அம்சம் என்பது மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருப்பதுதான். மக்களே தங்களுக்கு விருப்பமான தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். வாக்கு அரசியல் முறை பெரும்பான்மை நாடுகளில் இருந்தாலும், தேர்தல் முறையும், தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். தேர்தல் முறை வேறுவேறாக இருந்தாலும், எல்லா நாட்டுக்கும் பொதுவாக இருப்பது என்னவென்றால், அது தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் ‘கட்சி சின்னம்’ ஆகும்.
உலகமே உற்று நோக்கும் ஒரு தேர்தல் என்றால், அது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்தான். அந்த தேர்தலில் யார் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டாலும் குடியரசுக் கட்சியின் சின்னம் ‘யானை’, ஜனநாயக் கட்சியின் சின்னம் ‘கழுதை’. அதுதான் தேர்தலில் பிரதானப்படுத்தப்படும். அவ்வாறு இருக்கும்போது, இந்தியா மாதிரியான கல்வியறிவில் வளர்ந்துவரும் நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் சின்னம்தான், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும். இந்திய அளவில் எல்லாருக்கும் தெரிந்த சின்னம் என்றால், ஒன்று காங்கிரஸின் கை சின்னம், பா.ஜ.க-வின் தாமரை சின்னம். அதேபோல், தமிழ்நாட்டில் மூளைமுடுக்கு வரை எல்லாருக்கும் தெரிந்த சின்னம் என்றால், உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள்தான். தமிழ்நாட்டில், எந்த இடத்திலும், எந்த வகையான தேர்தலிலும் இந்த இரண்டு சின்னத்தில் நிற்கும் வேட்பாளர்கள்தான் முதல் இரண்டு இடத்தை பிடிப்பார்கள். தமிழ்நாட்டின் வின்னர், ரன்னர் என்றால் அது உதயசூரியனும், இரட்டை இலையும் தான். வேறு எத்தனை சின்னம் இருந்தாலும் அவர்கள் பங்கேற்பாளர்கள்தான். அதுதான் சின்னத்திற்கான மவூசு.
அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.கவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னம்தான் உதயசூரியன். அந்த உதயசூரியன் இதுவரை மங்காத சூரியனாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இரட்டை இலையின் வரலாறு அப்படி இல்லை. இது இரண்டு முறை உதிர்ந்து உதிர்ந்துதான் தளர்ந்து உள்ளது. ஆனால், இப்போதும் ரேஸில் முதல் இரண்டு இடங்களில்தான் உள்ளது. அதுமட்டுமின்றி, எம்.ஜி.ஆர் வேட்பாளரையே தோற்கடித்த வரலாறு இரட்டை இலைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரட்டை இலை மீண்டும் கடினமான கால கட்டத்தில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் அ.தி.மு.க ஒற்றைத் தலைமையாக உருவாக எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். முதலமைச்சர் வேட்பாளர் பதவியையும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் வாங்கியது போல எளிதாக அ.தி.மு.க தலைமைப் பதவியை பிடித்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கு நினைத்தது நடக்கவில்லை. இந்த விவகாரத்தில், அதுவரை இல்லாத அளவிற்கு ஓ.பி.எஸ் கடும் எதிர்ப்பைக் காட்டினார். அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் ஓ.பன்னீர் செல்வம். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் மூலமாக முட்டுக்கட்டை போட்டார் ஓ.பி.எஸ்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் உண்டாகி சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அவங்களுக்கு இடையே பிரச்சனை குறையவில்லை. அ.தி.மு.க-வின் தலைவர் யார், யார் பொருளாளர், யாருக்கு பொதுக்குழுவை கூட்ட உரிமை உள்ளது? இந்தக் கேள்விக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது. யாரேனும் பதில் சொன்னாலும் அதுதான் சரி என்று ஒப்புக்கொள்ளவும் முடியாது. ‘எல்லாத்தையும் மேல இருக்கவன் பாத்துக்குவான்’ என்பது போல அந்த மேலே இருக்கவன் என்பது மத்திய பா.ஜ.க அரசு என்பதை புரிந்துக்கொள்ளலாம், அல்லது தேர்தல் ஆணையம் என்றும் புரிந்துக்கொள்ளலாம், இல்லை உச்சநீதிமன்றம் எனவும் புரிந்துக்கொள்ளலாம். அல்லது மூன்றும் என்றும் புரிந்துக்கொள்ளலாம். ஏனென்றால், அ.தி.மு.க-வின் விவகாரம் மூன்று இடத்திலும் நிலுவையில் உள்ளது.
ஒரு கட்சியின் விதிகள், நிர்வாகிகளின் ஆதரவுதான் கட்சி யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய முக்கிய காரணமாக அமையும். ஆனால், கட்சியின் அதிகபட்ச அதிகாரம் கொண்ட தலைவர்களுக்கு இடையே போட்டி வரும்போது கட்சி முடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கலாம். கட்சி முடங்குவது என்பது சின்னம் முடங்குவதுதான். யாரும் கட்சிப் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சி முடங்கியிருந்தால் புது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டியிருக்கும்.
அந்த சிக்கலையும் அ.தி.மு.கவும், இரட்டை இலையும் ஏற்கெனவே எதிர்கொண்டிருக்கிறது. 1989-ல் ஜெயலலிதா, ஜானகி பிரச்சனையால் இரட்டை இலை முடங்கியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவால் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. இரண்டாவது முறை 2017-ல் இரட்டை இலை முடங்கியது. ஆனால் அப்போது பெரிய தேர்தல்கள் வருவதற்கு முன்பே இரட்டை இலை சின்னமும், கட்சியும் மீட்கப்பட்டது. இப்போது, அப்படி ஒரு சூழல்தான் நிலவுகிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள்கூட இல்லை. தமிழ்நாட்டில் ஒரு வலுவான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது பா.ஜ.க-வின் எண்ணமாக உள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க சூழல் இல்லாததால், அ.தி.மு.கதான் பா.ஜ.க-வின் தேர்வாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக இருக்கும் அ.தி.மு.கவால், மிக வலிமையாக இருக்கும் தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாது என பா.ஜ.க. கருதுகிறது. எனவே, ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய அனைவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. அல்லது குறைந்தபட்சம் முன்புபோல ஓ.பி.எஸ்-சை கட்சியில் சேர்க்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வின் முடிவுக்கு உடன்படவில்லை. தான் ஒற்றைத் தலைமையாகதான் இருப்பேன் என்பதில் உறுதியாக உள்ளார். மாறாக, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க இல்லாமல் போட்டியிடலாம் என்பதுதான் அவரின் விருப்பமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அதற்கு உதாரணம்தான், தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி வைக்கும் என சி.வி.சண்முகம் பேசியது. இது பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்பதைதான் காட்டுகிறது என அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
மேலும், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஓ.பி.எஸ் திடீரென அவர் தரப்பு நிர்வாகிளுடன் சந்திப்பை நடத்துகிறார். ‘கூட்டணியை முடிவு செய்வேன், எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்க வேண்டும், கட்சியை கபலிகரம் செய்ய முடியாது, இரட்டை இலை சின்னம் முடங்காது, மாறாக எனக்குதான் சின்னம் கிடைக்கும்’ என பேசியிருந்தார். ஓ.பி.எஸ் சின்ன சின்ன முடிவையும் பா.ஜ.கவுடன் ஆலோசனை செய்துவிட்டுதான் செயல்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது, திடீரென இவ்வளவு பெரிய சந்திப்பு ஏற்பாடு செய்ததற்கும் பா.ஜ.க தரப்பு ஆலோசனை இருக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறது. இது மூலமாக, எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக பா.ஜ.க சமிஞ்சை கொடுக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
எடப்பாடி பழனிசாமி இதற்கு இணங்காத பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கான பணியையும் பா.ஜ.க செய்யலாம் எனவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலாவையோ, டி.டி.வி.தினகரனையோ, ஓ.பன்னீர் செல்வத்தையோ ஒதுக்கிவைக்கும் தைரியம் இருக்கலாம். அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்லலாம். பா.ஜ.க இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடிவு எடுக்க தைரியம் இருக்கலாம். ஆனால், இரட்டை இலை இல்லாமலோ, அ.தி.மு.க கட்சி அடையாளம் இல்லாமலோ தேர்தலை எதிர்கொள்ள நிச்சயம் தைரியம் வராது என்பது பொதுவான பார்வை.
எனவே, பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தால் இரட்டை இலையை முடக்க பா.ஜ.க தயங்காது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் இடைப்பட்ட காலத்தில் தன் விருப்பப்படி அதிமுகவை வளைத்து கொள்ள முடியும் என்பதுதான் பா.ஜ.க-வின் கணிப்பு என முனுமுனுக்கப்படுகிறது.

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress