சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் ஒத்திவைப்பு
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ந்தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி முத்துக்குமரன் இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்தார். அதில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என இந்த கோர்ட்டு முடிவு செய்கிறது. இவர்களுக்கு தண்டனை வழங்குவது சம்பந்தமாக மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு ஆகியவை தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
அவர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கை ஆகியவற்றையும் வருகிற 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 9 போலீசாருக்கும் என்னென்ன தண்டனை என்ற விவரங்கள் 30-ந்தேதி (அதாவது இன்று) அறிவிக்கப்படும்” என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகளான 9 போலீஸ்காரர்களுக்கும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருந்தது.
இந்த நிலையில், தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் கேட்கப்பட்டிருந்த அறிக்கை இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல் காரணமாக அறிக்கை தாக்கல் செய்யும் பணி தாமதமானதாக அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், “தேர்தலுக்கும், அறிக்கை தாக்கல் செய்வதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “சாத்தான்குளம் வழக்கு மிக முக்கியமான வழக்கு. எந்த கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாக தாக்கல் செய்யுங்கள்” என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்த நீதிபதி, இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் அறிவிக்கும் தினத்தை ஏப்ரல் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel