2026 காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீரர் சாதனை!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் சானம்பம் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தாண்டு இது இந்தியா வாங்கும் முதல் வெள்ளிப் பதக்கமாகும். பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜந்து குமார் வென்ற வெண்கலப் பதக்கத்தைத் தொடர்ந்து, இத்தொடரில் இந்தியா வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோ மற்றும் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோ என மொத்தம் 264 கிலோ எடையை அவர் தூக்கினார்.
மலேசியாவின் முகமது அனிக் பின் கஸ்தான், 273 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். 260 கிலோவுடன் கென்யாவின் ஜோசுவா அமுங்கா எம்போயா வெண்கலப் பதக்கம் வென்றார்.
விளையாட்டு வீரர்களுக்கான ராணுவ கட்டமைப்பின் கீழ் இணைந்து தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக 55 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற 2025 காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் மொத்தம் 271 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இதுவே இவர் 2026 காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற உதவியது. 2024-ல் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 124 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்திருந்தார்.