மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறிவித்ததாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் "தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று கூறப்பட்டிருந்தது.

பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டாமாறுதல், சான்றிதழ்கள் பெறுதல், நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த வினோத கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தாசில்தாரின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel