பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !
பிரதமர் நரேந்திர மோடி தனது பேஸ்புக் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஒன்று, தளத்தில் திடீரெனத் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்துள்ள மெட்டா நிறுவனம், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக வீடியோ நீக்கப்பட்டது" எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அந்த வீடியோவை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
தேர்வுத் தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து, நாட்டின் இளைஞர்கள் மற்றும் Gen-Z தலைமுறையினரை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி வடிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறுகிய நேரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வைரலானது.
ஆனால், திடீரென அந்த வீடியோ பேஸ்புக் பக்கத்தில் முடக்கப்பட்டு, "சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு இந்தியாவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்ற அறிவிப்புத் திரையில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறி அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜனநாயக நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடியோவே தவறுதலாக முடக்கப்பட்ட விவகாரத்தை இந்திய அரசு மிகக் கடுமையான விஷயமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேப்பர் லீக் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிய பிரதமர், "தேர்வுத் தாள் கசிவு என்பது மிகக் கடுமையானப் பிரச்சனை. இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தனிச் சட்டமும், விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படும்" என உறுதியளித்திருந்தார்.
பிரதமரின் இந்த வீடியோ சட்டப்பூர்வக் கோரிக்கை காரணமாக முடக்கப்பட்டதாகத் திரையில் காட்டியது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், மெட்டாவின் விளக்கம் மற்றும் அரசின் சம்மன் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.