சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.
இந்தியாவின் சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து நாளை காலை 8.20 மணிக்கு முதலமைச்சர் விஜய் புறப்படுவார்.
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வரும்போது அவரது காரின் முன்பும், பின்பும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார்.
சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதலமைச்சர் காலை 8.35 மணிக்கு வந்திறங்குவார். அங்கு அவரை தலைமைச் செயலாளர் சாய் குமார் வரவேற்பார்.
பின்னர் அங்கு தென்னிந்திய பகுதிகளின் ராணுவத் தலைமையக படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.
அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் வழங்குவார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர். அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவர் ஆகியோருக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்படும்.
தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். பின்னர் விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் இனிப்புகளை வழங்குவார்.
சென்னை கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் என பல தரப்பினரும் கோட்டைக்கு வருவார்கள். அவர்களுக்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. காலை 9.30 மணியளவில் விழா நிறைவு பெறும். பின்னர் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு முதலமைச்சர் விஜய், சுதந்திர தின வாழ்த்துகளை கையசைத்து தெரிவித்தபடி காரில் புறப்பட்டுச் செல்வார்.
இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர்வதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே அலங்கரிக்கப்பட்ட தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சபாநாயகர், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர். அரசு உயர் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.
இதற்காக கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது.
சுதந்திரதின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளது.
அதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.