ஈரானுக்கு எதிரான போரில் ஆப்ரகாம் லிங்கன் போர்க் கப்பலுக்குப் பதில் யு.எஸ்.எஸ். வாஷிங்டன்?
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இந்த போரில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.
ஆப்ரகாம் லிங்கன் கப்பல் சான் டியாகோவில் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி அன்று தனது பயணத்தை தொடங்கியது. இந்த வருடம் ஜனவரி மாதம் மத்திய கிழக்குப் பகுதியை வந்தடைந்தது. பிப்ரவரி 28-ந்தேதி போரில் ஈடுபட்டது.
ஈரானுக்கு எதிரான போரில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த வாரத்துடன் ஆப்ரகாம் லிங்கன் புறப்பட்டு 260 நாட்கள் நிறைவடைகிறது. பொதுவாக அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒரு முறை புறப்பட்டால் 6 முதல் 7 வாரங்களில் திரும்ப சென்றடைந்து விடும். அல்லது வீரர்கள் 7 மாதத்திற்குள் வீடு திரும்பி விடுவார்கள்.
ஆனால் இந்த முறை இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் வீரர்கள் மனஉறுதி இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இரண்டு முக்கிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில வீரர்கள் கடலில் குதிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், வீர்ரகள் போர்க்கப்பலில் ஏறும்போது உணவு, சுத்தமான பொருட்கள் அதன்பின் மெயில் (குடும்பத்தினரை தொடர்பு கொள்வது உள்பட) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் ஆப்ரகாம் லிங்கன் கப்பலில் மோசமான நிலை நிலவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. போார்க் காரணமாக வீரர்கள் மெயில் தொடர்பு இல்லாமல் தவிப்பதாக தெரிகிறது. அதோடு தூய்மையான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த செய்திகள் முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஒவ்வொரு கப்பலுக்கும், ஒவ்வொரு குழுவினருக்கும், ஒவ்வொரு கப்பல் தலைவருக்கும், எந்தவொரு தருணத்திலும் எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். சில பணி நியமனங்கள் மற்றவற்றை விட நீண்ட காலத்தைக் கொண்டவை. அத்தகைய சூழலில் பணியாற்றும் மாலுமிகள் மீது எனக்கு மற்ற யாரையும் விட அதிக மரியாதையும் நன்றியுணர்வும் உண்டு. கரையை அல்லது துறைமுகத்தை அடையும் வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில், கொந்தளிப்பான கடற்பரப்பில், மிகவும் கடினமான சூழலில் அவர்கள் ஆற்றும் பணிகள் உண்மையிலேயே வியக்கத்தக்கவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் USS ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் மத்திய கிழக்குப் பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது. பிசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலை இணைக்கும் மலாக்கா ஜலசந்தியில் காணப்படுவதாகும், இந்திய பெருங்கடல் நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆப்ரகாம் லிங்கன் கப்பலுக்குப் பதிலாக USS வாஷிங்டன் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.