கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சார்ந்ததா?: தமிழக அரசை சாடிய சென்னை ஐகோர்ட்

பேரணி நடத்த தி.க., பா.ஜ.க.விற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

அதில், பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க.வுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?

சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்?

அமைதியாக கொடி பிடித்துச் செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது?

அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?

தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பா.ஜ.க. ஊர்வலம் செல்லக்கூடாது. த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டார்களா?

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என கூறிய நீதிபதி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக, பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், 4 நாளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.

அதன்பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம்.

அதிகாரிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.

காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.

காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel