கவுகாத்தி: உடைகளை களைத்து பெண் மீது கொடூர தாக்குதல்- 'தி லோக்கல்ஸ்' பப்பில் நடந்தது என்ன?
கவுகாத்தியின் கானாபாரா பகுதியில் உள்ள ‘தி லோக்கல்ஸ் கஃபே அண்ட் லவுஞ்ச்’ என்ற இரவு விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, அந்த விடுதியின் உள்ளே அந்தப் பெண்ணுடன் பவுண்சர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் வலுக்கட்டாயமாகத் வெளியே தள்ளிவிடப்பட்டு, ஆடைகள் கிழிக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ காண்போரை உறைய வைக்கும் வகையில் உள்ளன.
அந்த வீடியோவில், இளம்பெண் ஆடைகளின்றி தரையில் விழுந்து கிடக்கும் போது, இரண்டு பெண் பவுண்சர்கள் அவரை கால்களால் எட்டி உதைக்கின்றனர். அருகில் பல ஆண்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மற்றொரு பெண் உதவ முயல்கிறார். ஆனால், ஒரு கார் வந்து மறைப்பதால் அதற்கு மேல் அங்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட பெண் விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே உள்ள வாகன நிறுத்தும் பகுதிக்கு இழுத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழிநெடுகிலும் அவர் மீதான தாக்குதல் தொடர்ந்து நீடித்துள்ளது. தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், சம்பவத்திற்கு முன்னதாக அவருக்கும் ஒரு பெண் பவுன்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து ஊடகவியலாளர்கள் அந்த இரவு விடுதிக்குச் சென்றபோது, விடுதி மூடப்பட்டிருந்ததுடன், அதன் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ விடுதி நிர்வாகத் தரப்பில் இருந்து யாரும் முன்வரவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கவுகாத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விடுதி ஊழியர்கள் அல்லது பவுன்சர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel