ஜனாதிபதி மாளிகையில் பூந்தோட்டம் திறப்பு - ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை இலவச அனுமதி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற புகழ்பெற்ற அமிர்த உத்யானத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, கண்கவர் வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை பார்வையிட்டார்.
அம்ரித் உத்யான்
அம்ரித் உத்யான் என்பது டெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் (ராஷ்டிரபதி பவன்) வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு அழகான தோட்டமாகும்.
பால்சம்/குல்-மெஹந்தி, அபராஜிதா, ருக்மிணி, பர்ஷா பூல், லால் சாக் மற்றும் நாக்பானா உள்ளிட்ட பூர்வீகத் தாவரங்கள் அடங்கிய இந்த தோட்டம், இந்தியாவின் வளமான மலர் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதோடு, தோட்டங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது.
அனுமதி காலம்
வருடந்தோறும் மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் பொதுமக்களுக்கு கடைசி பதிவு மாலை 5 மணிக்கு பின்பு நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட பராமரிப்பு பணிகளுக்காக வார விடுமுறையாக ஒவ்வொரு திங்களட்கிழமையும், இந்த தோட்டம் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்பதிவு
ராஷ்டிரபதி பவனுக்கு வரும் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் என்றும், இதற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வ இணையதளமான visit.rashtrapatibhavan.gov.in மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கண்கவர் வண்ணங்களுக்கும் சூழலியல் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்ற, பூர்வீக மற்றும் உள்ளூர் பூக்கும் தாவரங்களே இந்த முறை உத்யானத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைய உள்ளது.
பிரத்யேக அனுமதி
ராஷ்டிரபதி பவனுக்கு வரும், விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதியும், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்றும், அம்ரித் உத்யானில் பிரத்யேக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில், மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து அம்ரித் உத்யானத்தின் நுழைவாயில் வரை ‘அம்ரித் உத்யானத்திற்கான பேருந்து சேவை’ என்ற பேனருடன் கூடிய இரண்டு இடத்திற்கும் இடையிலான இணைப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பதிவு
இந்த நிகழ்வு குறித்து குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற அம்ரித் உத்யான் சம்மர் ஆனுவல்ஸ் 2026 தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறப்பித்தார்,” என்று பதிவிடப்பட்டுள்ளது.