மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா கோலாகலம்: வானில் மிதந்த வண்ணமயமான பட்டங்களை ரசித்த பொதுமக்கள்!
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில், 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
சுதந்திர தின வார இறுதியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டம் பறக்கவிடும் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் உருவான பல வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டுப் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
இந்த விழாவில் இந்தியா (தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம்) மட்டுமின்றி தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பட்டம் பறக்கவிடும் நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கடற்கரைக் காற்று சாதகமாக வீசியதால், சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ராட்சத பட்டங்கள் மாமல்லபுரம் வானில் வண்ணமயமாகப் பறந்தன.
ஆக்டோபஸ், டால்பின், ஆமை, டிராகன், சூப்பர்மேன், மிக்கி மவுஸ், லபுபு மற்றும் ராட்சத ஷார்க் போன்ற பல்வேறு வடிவங்களிலான காற்று நிரப்பப்பட்ட பட்டங்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் பெரிதும் கவர்ந்தன.
தமிழ்நாட்டின் "ஸ்கைட்டர்ஸ்" குழுவினர் தங்களின் விருது பெற்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ பட்டங்களை வானில் பறக்கவிட்டு நமது பாரம்பரிய பெருமையை பறைசாற்றினர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, ஒளிரும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட சிறப்புப் பட்டங்கள் வானில் ஜொலித்து இரவை மேலும் அழகாக்கின.
இந்த பட்டம் விடும் திருவிழா முற்றிலும் இலவச அனுமதி கொண்ட ஒரு குடும்பக் திருவிழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களுக்கான கடற்கரை உணவு அரங்குகள், கைவினைப் பொருட்கள் விற்பனைச் சந்தை, குழந்தைகள் புகைப்படப் பகுதிகள் மற்றும் ஃபார்முலா 1 கார் மாதிரி காட்சிப்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
விழாவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் சிறப்புத் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.