சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை
தைவான் நாட்டின் மீது சீனா எந்நேரமும் படையெடுக்கலாம் அல்லது வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில், தைவான் அரசு நாடு முழுவதும் தனது வருடாந்திர 'ஹான் குவாங்' சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியுள்ளது. இந்த முறை வழக்கம் போல் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் பயிற்சிகளுடன் சேர்த்து, வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு தழுவிய அளவில் கைபேசி இணைய வேகத்தை அதிரடியாகக் குறைத்து ‘இணைய முடக்க’ சோதனையையும் தைவான் மேற்கொண்டுள்ளது.
இந்தப் பயிற்சியின் போது தைவானின் தலைநகர் தைபே உட்பட முக்கிய பகுதிகளில் இணைய வேகம் மிகக் கடுமையாகக் குறைக்கப்பட்டது. சாதாரண கைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மட்டுமே வேலை செய்தன. உயர் அலைவரிசை தேவைப்படும் டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் வீடியோ கால்கள் முற்றிலும் செயல்படாமல் முடங்கின. பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல் சைரன் ஒலித்தவுடன், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தெருக்களில் இருந்த மக்களை உடனடியாக அருகில் உள்ள நிலத்தடிப் பாதைகள் மற்றும் வாகனக் காப்பகங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர். சில நிமிடங்களிலேயே பரபரப்பான நகர வீதிகள் முற்றிலும் வெறிச்சோடின. அதே நேரத்தில், மக்களின் செல்போன்களுக்கு "தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மீதான தாக்குதலைச் சித்தரிக்கும் வகையில் இணைய வேகம் குறைக்கப்படுகிறது" என்ற எச்சரிக்கைச் செய்தியும் அனுப்பப்பட்டது.
இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. சில தன்னார்வ சிவில் பாதுகாப்பு அமைப்புகள் இணையமே தேவையில்லாத, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் நீண்டதூர ரேடியோ அலைவரிசைகள் மற்றும் புளூடூத் சாதனங்கள் மூலம் மெசேஜ்களை அனுப்பி வெற்றிகரமாகச் சோதித்தனர். இதன் மூலம் அவசர காலத்தில் அரசின் கட்டளைகளையும் தகவல்களையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டது.
தைவானை உலகத்துடன் இணைக்கும் 16 சர்வதேச ஆழ்கடல் இணைய கேபிள்கள் மீது சீனா மறைமுகத் தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனக் கப்பல்கள் தைவானின் கடல்சார் கேபிள்களைச் சேதப்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒருவேளை போர் மூண்டால், சீனா முதலில் தைவானின் இணையத் தொடர்பையும், ஆழ்கடல் கேபிள்களையும் துண்டித்து, நாட்டை உலகிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கும் என்பதால், இந்த முன்கூட்டிய டிஜிட்டல் முடக்கப் பயிற்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ரஷிய-உக்ரைன் போரின் போது உக்ரைனின் இணையக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட பிறகு, எலான் மாஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையம் அந்நாட்டிற்குப் பெரும் உதவியாக இருந்தது. அதேபோல, தைவானும் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை நாட்டிற்குள் கொண்டு வரச் சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறது. எதிரி நாடுகள் இணையத்தைத் துண்டித்தாலும் செயற்கைக்கோள் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தைவான் நடவடிக்கை எடுத்து வருகிறது.