டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!
தொலைக்காட்சி சேனல்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் வணிக விளம்பரம் மற்றும் 2 நிமிடங்கள் சுய விளம்பரம் என மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. 2006-ஆம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த விளம்பரக் கட்டுப்பாட்டை தளர்வு செய்து நீக்குவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. இந்த இடைவெளியைக் குறைத்து, தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் டிஜிட்டல் தளங்களுக்கு இணையான சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவும், தொழில் நடத்துவதை எளிதாக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போது இந்தியாவில் வெறும் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட சேனல்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், கேபிள் டிவி, DTH, HITS மற்றும் IPTV போன்ற நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களால் நேயர்களுக்கு பல நூற்றுக்கணக்கான சேனல்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தையில் போதிய போட்டி நிலவுவதால், இனி சந்தை விதிகளே விளம்பர நேரத்தைத் தீர்மானிக்கும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவு, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 திருத்தம் செய்யப்பட்டு மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்.