கர்ம வினைகள், தோஷங்களை நீக்கும் கருட பஞ்சமி வழிபாடு
'பெரிய திருவடி' எனப் போற்றப்படும் கருட பகவான் பிறந்த தினமே 'கருட பஞ்சமி' ஆகும். ஆடி மாத அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதி நாள்தான், 'கருட பஞ்சமி' என்று போற்றப்படுகிறது. இதை 'கருட ஜெயந்தி' என்றும் சொல்வதுண்டு. ஒரு ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதியுடன் கூடிய சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அவதரித்ததாக கூறப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் கொடியாகவும், வாகனமாகவும், காவலனாகவும் இருப்பவர், கருட பகவான். கருட பஞ்சமி தினத்தன்று, பறவைகளின் தலைவனாக போற்றப்படும் கருட பகவானையும், மகா விஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகளை பெறலாம்.
காசியப முனிவருக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவிகள் இருந்தனர். கத்ரு மற்றும் வினதை இருவரும் சகோதரிகள் ஆவர். முதல் மனைவியான கத்ருவுக்கு நாகர்களும், இரண்டாம் மனைவியான வினதைக்கு அருணன் மற்றும் கருடன் ஆகியோரும் மகன்களாக இருந்தனர்.
ஒரு சமயம் 'உச்சைஸ்வரஸ்' என்ற தெய்வீக குதிரையின் வாலின் நிறம் குறித்து கத்ருவுக்கும், வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாலின் நிறம் வெள்ளை என்று வினதையும், கருப்பு என்று கத்ருவும் வாதிட்டனர். இறுதியில், யார் கூறுவது உண்மையோ அவருக்கு மற்றவர் அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
கத்ரு, தன் மகனான கார்க்கோடகன் என்ற கருப்பு நிற பாம்பின் உதவியுடன், குதிரையின் வெள்ளை நிற வாலை சுற்றி, கருப்பாக தோன்றும்படி செய்தார். கத்ருவின் சூழ்ச்சியால், வினதை கத்ருவுக்கு அடிமையானார்.
இதை அறிந்த வினதையின் மகனான கருடன், தன் தாயை விடுவிக்க முயன்றார். அதற்கு, தேவர்களிடம் இருந்து அமிர்த கலசத்தை கொண்டுவர வேண்டும் என்று நாகர்கள் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து கருடன், தன் வீரத்தாலும், பக்தியாலும் தேவர்களை வென்று, அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். பின்னர், மகாவிஷ்ணுவின் அருளால் வினதையை அடிமைத் தனத்தில் இருந்து விடுவித்தார்.
கருடனின் துணிச்சலையும், தாய்ப் பாசத்தையும் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவரை தன் வாகனமாக ஏற்றுக்கொண்டார். இதன் நினைவாக கருட பஞ்சமி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கருட பஞ்சமி, ஆகஸ்டு 17-ந் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்து, கருடாழ்வார் மற்றும் மகாவிஷ்ணுவின் படங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இறைவனுக்கு மஞ்சள், குங்குமம், மலர்கள், துளசி சாற்றி, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பழங்கள், பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைக்கலாம். அன்றைய தினம் விஷ்ணு மற்றும் கருடன் பாடல்களையும், மந்திரங்களையும் பாராயணம் செய்து வழிபடலாம்.
கருட பஞ்சமி தினத்தன்று, அமிர்த கலசத்துடன் இருக்கும் கருடனையும், கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளையும் தரிசித்தால் மிகவும் விசேஷமாகும். தன்னை எப்போதும் சுமந்துக் கொண்டிருக்கும் கருடனை வழிபடுபவர்களுக்கு மகா விஷ்ணுவின் அருளும் முழுமையாக கிடைக்கும்.
கருடனின் திருவருளைப் பெற்று தரும் கருட பஞ்சமி நாளில், கருடனை மனதார வழிபட்டால் கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும், பகை உணர்வு நீங்கும், பக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்கள் மாங்கல்ய பேறு பெறுவார்கள். இந்நாளில் கருடனை கண்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.