3 தமிழர்கள் கொலையில் சிபிஐ விசாரணை வேண்டும் - சட்டசபையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சட்டசபையில் கொண்டு வந்தார்.
இதன் மீதான விவாதத்தில் பேசிய குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித்,
"கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது.
இதை முதலமைச்சர் கண்டித்துள்ளார். கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல.
எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
அதைப்போல இன்றைக்கு மகிமி தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலைமை இருக்கிறது.
அதற்கும் கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு.
இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன். "என்றார்.
தொடர்ந்து தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசுகையில், "தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் நம் முதலமைச்சரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.
கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா பேசுகையில், " மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி.
துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்." என்றார்.