திருவண்ணாமலை பக்தர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 1-ந்தேதி முதல் வரும் புது ரூல்ஸ்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.

கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் டோக்கன்களை காண்பித்து பாதுகாப்பு மையங்களில் இருந்து செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel