ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - அமெரிக்க தூதர் திட்டவட்டம்

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு சென்றுள்ளார்.

சந்திப்பு

நேற்று ஸ்ரீநகர் சென்றடைந்ததும் முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

ஸ்ரீநகரில் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அப்போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான பகுதி என்றும், இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிக்கு வர ஏராளமான அமெரிக்கர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக செர்ஜியோ கோர் பாராட்டினார்.

மேலும், "அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்குப் பயண எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. இந்த எச்சரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருகிறோம்.

பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ள சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்க பயணிகள் வருகை தர தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகளை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்யும் என்றார்.

மிகச் சுமூகமாகவும் நட்புறவோடும் இந்தச் சந்திப்பு அமைந்ததாகவும், வாஷிங்டன் மற்றும் டெல்லி திரும்பிய பிறகு இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும் என்றும் அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கு 2019 இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க தூதர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறிய முதல்வர் உமர் அப்துல்லா, இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவுகள் குறித்தும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel