ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் - கீவ்-இல் இருவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் ரஷ்ய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ராணுவமும் தெரிவித்தன.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவும் உக்ரைனும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்கள் மீதான தனது தொலைதூர தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
கீவ் மீது இரவில் நடத்தப்பட்ட ஒரு பெரும் ஏவுகணை தாக்குதலில், குடியிருப்பு பகுதிகளும் கிடங்குகளும் தாக்கப்பட்டன; இதில் மக்கள் காயமடைந்தனர் அல்லது உயிரிழந்தனர் என்று கீவ் மேயர் விட்டாலி கிளிச்கோ டெலிகிராமில் எழுதியுள்ளார்.
"ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மேல் தளங்கள் இடிந்து விழுந்ததோடு, தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். மற்றொரு பகுதியில், மக்கள் ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் சிக்கியுள்ளனர். ஒரு தங்குமிடத்திற்குள் மக்கள் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வந்திருப்பதாக அவர் முன்னதாக கூறியிருந்தார்.
"ஆறு பேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. வருந்தத்தக்க வகையில், எதிரிகளின் தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்," என்று கீவ் நகர அதிகாரிகள் டெலிகிராமில் உயிரிழப்பு எண்ணிக்கையை தெரிவித்தனர்.
கீவ் பிராந்தியத்தில் உள்ள ககார்லிக் கிராமத்தின் அருகே, தலைநகரை நோக்கி ரஷ்யாவின் 'கலிபர்' ஏவுகணைகள் வருவதாகவும் உக்ரைன் விமானப்படை எச்சரித்துள்ளது.
கீவ் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஏறக்குறைய நானரை ஆண்டுகாலப் போருக்குப் பிறகு ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு வர அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில், உக்ரைனும் சமீப மாதங்களில் ரஷ்யா மீதான தனது பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.