தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

100 நாட்களை நிறைவு செய்த கருப்பு..!- ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பிரமாண்ட வரலாற்றுச் சாதனை படைத்துள்ள 'கருப்பு' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே பாலாஜி தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கருப்பு திரைப்படம் 100 நாட்களைக் கடந்ததையொட்டி நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கண்ணுங்களா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா! கருப்பு திரைப்படத்தை உங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு கோடான கோடி நன்றிகள் - இந்த மாபெரும் வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது" என்று தனது நெகிழ்ச்சிப்பதிவை பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் இயக்குநரும், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஆர்.ஜே. பாலாஜி, "ஒரு தேவதைக் கதைப் பயணத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு தலைமுறைகள், ஆனாலும், கருப்பு திரைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்து வாழ்கிறது. இது ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர்.

நன்றி இறைவா..! நன்றி மக்களே.! இதைவிடச் சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்டிருக்க முடியாது.! கருப்பா, என்னுடன் வா" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யாவின் 45-வது திரைப்படமாக வெளியான 'கருப்பு', அவரது திரைப்பயணத்திலேயே மிக அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்துள்ளது.

திரைப்படம் வெளியான 3 நாட்களிலேயே உலகளவில் 120 கோடி ரூபாயைக் கடந்த இப்படம், வெறும் 8 நாட்களில் 200 கோடியைத் தாண்டியது. தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 'ஜெனரேஷனல் பிளாக்பஸ்டர்' என திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறது.

ஒரு நேர்மையான வழக்கறிஞரின் உடலுக்குள் 'வேட்டை கருப்பு' என்ற காவல் தெய்வம் புகுந்து நீதிமன்றத்திலேயே அமானுஷ்ய சக்தியுடன் நீதியை நிலைநாட்டும் ஒரு அருமையான அதிரடித் திரைப்படமாக இது உருவாகியிருந்தது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு ஆகியவை இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியக் தூண்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel