நவம்பர் 13-ந்தேதி உலகம் அழியுமா?- இணையத்தில் வெளியான கணித அறிஞர் கணிப்பால் பரபரப்பு
நவம்பர் 13-ந்தேதி...
கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகமாக பேசுபொருளாகி உள்ள தேதி இது. இந்த தேதி உலக அளவில் பலரையும் நடுங்கவும் வைத்துள்ளது.
இந்த நாளில் பூமி அழியப் போகிறது என்றும், அன்றுடன் மனித இனம் அழியப் போகிறது என்ற செய்தி காட்டுத்தீயாக பரவிக் கொண்டு இருக்கிறது. எத்தனையோ போலி தீர்க்க தரிசனங்களை நாம் இதுவரைக்கும் கடந்து வந்து இருக்கிறோம். ஆனால் இது ஒரு சாமியாரோ, தீர்க்கதரிசியோ சொன்னது கிடையாது.
உலகத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானி கணிதபூர்வமாக நிரூபித்து சொல்லியிருக்கும் நாள் இது. நிறைய தேதிகள் இருக்கும் போது சரியாக நவம்பர் 13-ந்தேதியை ஏன் அவர் தேர்ந்து எடுத்தார். அதற்கு பின்னாடி இருக்கக்கூடிய பயங்கரமான கணக்கு என்ன? சற்று விரிவாக பார்ப்போம்.
1960-வது வருடம் ஆஸ்டிரிய அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டர் விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கினார்.
கடந்த 2000 ஆயிரம் ஆண்டு கால உலக மக்கள் தொகையோட வளர்ச்சி தரவுகளை கையில் எடுத்தார். மனித இனம் எப்படி வளர்ந்து இருக்கிறது என்று கணக்கு போட்ட போது ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை அவருக்கு தெரிந்தது. இயற்கையோட விதிகளை மீறி மனித இனம் ஒரு ஹைபர் போலிக் குரோத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. அதாவது மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அடுத்தடுத்து அது வளருகிற வேகமும் அதிகரிக்கும் என்று அவர் நினைத்தார்.
போர்ஸ்டர் ஒரு பிரத்யேக கணித பார்முலாவை உருவாக்கினார். அந்த பார்முலாவில் கடந்த கால தரவுகளை போட்டு எதிர்காலத்தை நோக்கி கணக்கு போட்டபிறகு அந்த கணித சமன்பாடு ஒரு குறிப்பிட்ட புள்ளியில் போய் நின்றது. கணிதத்துல சிங்கிளா ரிட்டி இல்லன்னா முடிவிலி புள்ளி என்று கூறுவார்கள். அதாவது கணக்கிட முடியாத அளவுக்கு ஒரு பிரமாண்டமான வெடிப்பு நிகழக் கூடிய புள்ளி.
அந்த கணக்கு காட்டிய துல்லியமான இறுதி தேதிதான் நவம்பர் 13, வெள்ளிக்கிழமை 2026. மேலை நாடுகளில் ‘பிரைடே 13இத்’ அப்படி என்பது ஒரு சபிக்கப்பட்ட துரதிருஷ்டவசமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் போர்ஸ்டர் வேண்டுமென்றே அந்த நாளை தேர்ந்து எடுக்கவில்லை.
அவருடைய கணித பார்முலா இயற்கையோட விதியாகி அந்த தேதியை கொண்டு வந்து நிறுத்தியதாலதான் எல்லோரும் இதை ஒரு மர்மமாக பார்க்கிறார்கள்.
மனிதர்களின் மக்கள்தொகை இதே வேகமாகவே தொடர்ந்து அதிகரித்தால், பூமியின் நிலைமை மோசமாகி, மக்கள் பசியால் மட்டும் அல்ல, ‘அதிகமான மக்கள் நெருக்கடியில்’ இறந்து விடுவார்கள் என அவர் எச்சரித்திருந்தார். அணு யுத்தம் அல்லது வேறு பெரிய பேரழிவு ஏதாவது நடக்காமல் இருந்தால், கட்டுப்பாடற்ற மக்கள்தொகை வளர்ச்சி மனித நாகரிகத்தையே பாதிக்கக் கூடும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
இப்போது இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டாலும், இதை “உலக அழிவு” கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வல்லுநர்கள் விளக்குகின்றனர். ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டர் கூட இதை எந்த வகையிலும் தெய்வீக தீர்க்கதரிசனம் என்று கூறவில்லை.
அப்போது கிடைத்த மக்கள் தொகைத் தரவுகளை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கணித மாதிரி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளனர். தற்போதைய நவீன மக்கள் தொகை ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டரின் கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ளனர். 1960-களில் உலக மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு 2.2 சதவீதமாக உச்சத்தில் இருந்த நிலையில், 2026-ல் இதன் வளர்ச்சி விகிதம் 0.84 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், போர்ஸ்டரின் கணிதக் கோட்பாட்டைப் பின்னோக்கி இயக்கிப் பார்த்த போது, மனித இனம் 200 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்ற தவறான முடிவு கிடைத்ததால், அவரே தனது கணிப்பில் பிழைகள் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
மக்கள்தொகை கட்டுப்பாடின்றி வேகமாக அதிகரித்தால், பூமியின் வளங்கள் மீது மிகுந்த அழுத்தம் வரும் என்ற எச்சரிக்கையாகவே இந்தக் கணிப்பு கருதப்பட்டது. பூமியின் வளங்கள் வரையறுக்கப்பட்டவை; கட்டுப்பாடில்லாத வளர்ச்சி ஒரு கட்டத்தில் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஐக்கிய நாடுகள் மற்றும் பிற அமைப்புகளின் சமீபத்திய ஆய்வுகள்படி, உலக மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில் நிலைபெற்று, 2030-க்கு அருகில் உச்சத்தை எட்டிய பின் மெதுவாகக் குறையலாம். 2026 என்ற ஆண்டு எந்த உண்மையான பேரழிவையும் குறிக்கவில்லை. அது அந்த பழைய கணித மாதிரியின் வரம்புகளை மட்டுமே காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்களே இந்தத் தேதியை ஒரு குறியீடாகத் தேர்ந்தெடுத்ததாகவும், நவம்பர் 13 என்பது ஹெய்ன்ஸ் வான் போர்ஸ்டரின் பிறந்த நாள் என்றும் கூறப்படுகிறது. அதனால், 2026-ல் உலகம் அழியும் என்ற கூற்று ஒரு அறிவியல் உண்மை அல்ல. ஒரு பழைய கணித மாதிரியை தவறாக புரிந்து கொண்டதால் உருவான தவறான பேச்சு மட்டுமே. ஆனால் இந்த ஆய்வு சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால், பூமியின் வளங்கள் வரையறுக்கப்பட்டவை. கட்டுப்பாடில்லாத வளர்ச்சி அல்லது மக்கள்தொகை அதிகரிப்பு நீண்ட காலத்தில் பெரிய சவால்களை உருவாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நவம்பர் 13-ந்தேதி நெருங்கி வருவதால், அறிவியலின் கணித மாதிரிகள் குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கணிதத் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற பேராசிரியர் இளங்கோ இந்த கணிப்பு பற்றி கூறியதாவது:-
கணிதத்தின் அடிப்படையிலான இந்த கணிப்பு என்பது அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஹெயின்ஸ் வான் போர்ஸ்டர் மக்கள் தொகை பெருக்கம் உலக அளவில் 1960-ல் 2.2 சதவீதமாக இருந்ததை அடிப்படையாக வைத்து கணித்துள்ளார்.
ஆனால் இப்போது 2.2 சதவீதமாக இருந்த பிறப்பு வளர்ச்சி என்பது 0.84 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதன் மூலம் அவர் கணித்த போது இருந்த கட்டுப்பாடு மாறி உள்ளது. இதன்படி பார்த்தால் பார்முலாவின்படி செய்யப்படும் கணிப்பு தவறாகி விடுகிறது. மேலும் அவரது ஆய்வுக்கால சூழல் வேறு. அதாவது இப்போது எல்நினோ மாற்றம், மேற்கத்திய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் இவைகளெல்லாம் கணிக்கும் அனுமானத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி பார்த்தால் போர்ஸ்டரின் கணிப்பு தவறாகி விடுகிறது. எனவே அந்த கூற்றை அடிப்படையாக வைத்து நவம்பர் 13-ந்தேதி உலகம் அழியும் என்ற கணிப்பு தவறாகும். எனவே இதை உண்மை என்று நம்பி மக்கள் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel