தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நேபாளத்தில் நிலச்சரிவுடன் கூடிய பெருவெள்ளம்: மாமரத்தை பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி!

நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து உருவான பேரழிவு பெருவெள்ளம் காரணமாக நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவினால் ஏற்பட்ட மிகப்பெரிய மண் மற்றும் பாறைச் சுவர்கள் ஆற்று நீரில் சரிந்து விழுந்ததால், பாய்ந்து வந்த அசுர வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். இந்தத் திடுக்கிடும் இயற்கை பேரிடரில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான பிபேக் குமால் என்ற தொழிலாளி, இந்த பெருவெள்ளத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். குழிக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த பலத்த இரைச்சல் சப்தத்தைக் கேட்டு சக தொழிலாளர்கள் எச்சரித்து ஓடியுள்ளனர். பிபேக் குழியை விட்டு வெளியேறுவதற்குள், நிலநடுக்கம் போல் சீறிப் பாய்ந்து வந்த சேறும் சகதியுமான பெருவெள்ளம் அவரை அடித்துச் சென்றது.

வெள்ளத்தில் கட்டுக்கடங்காமல் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், வழியில் இருந்த ஒரு மாமரத்தில் பலமாகச் சிக்கிக் கொண்டார். மரத்தின் கிளையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பல மணி நேரம் போராடிய அவரை, பின்னரே மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். "அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் நிச்சயமாக உயிருடன் இருந்திருக்க முடியாது" என காத்மாண்டு தேசிய அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பிபேக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தின் வேகம் மற்றும் இடிபாடுகளின் அடர்த்தி காரணமாக அப்பகுதியின் வீடுகள் மற்றும் வாகனங்கள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன. இதுவரை 114-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காத்மாண்டு மற்றும் ரசுவா பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மாயமானவர்களைத் தேடும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel