2029-க்குள் என்டிஏ ஆளும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித் ஷா
மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை தெரிவித்தார்.
வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே பொது சிவில் சட்டம் ஆகும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.
குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, "2014க்கு முன்னிருந்த ஊழல், வாரிசுஅரசியல் மற்றும்பலவீனமான பொருளாதார நிலையிலிருந்து விடுபட்டு, தற்போது இந்தியா உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளுக்குள் இணைந்துள்ளது.
முதல் காலாண்டில் 7.8% ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்து, சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்குவதன் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
நாட்டில் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளது." என்று தெரிவித்தார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel