INDIAN 7

Tamil News & polling

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

23 டிசம்பர் 2025 05:36 AM | views : 16
Nature


டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

காவிரி பாசன மாவட்டங்களில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அரசின் பல்வேறு ஆதாரங்களில் இருந்த நிதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக செலவிடப்பட்டதால் தான் உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அரசு நினைத்தால் 10 நாள்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உழவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். ஆனால், அரசின் அலட்சியத்தால் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 13&ஆம் தேதி வரை சராசரியாக 60% மட்டுமே நிறைவடைந்திருந்தன.

அதன்பின் கணக்கெடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, பயிர் சேதம் குறித்த அறிக்கைகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன. ஆனால், அறிக்கை கிடைத்தும் கூட பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசிடம் நிதி இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. நடப்பு மாதத்திலிருந்து கூடுதலாக 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக அரசின் பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திருப்பி விடப்பட்டிருப்பது தான் காரணம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் கூட, களச் சூழல்களை வைத்துப் பார்க்கும் போது, இச்செய்திகள் சரியானவை என நினைக்க காரணங்கள் உள்ளன.

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.13,087 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதி ஏற்கனவே இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த 1.16 கோடி பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இப்போது புதிதாக இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 17 லட்சம் மகளிருக்கு மார்ச் மாதம் வரை மாதம் ரூ.1000 வழங்க குறைந்தது ரூ.680 கோடி தேவை. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட துணை மானியக் கோரிக்கைகளில் கூட இந்தத் திட்டத்திற்காக கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படாத நிலையில், வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் கொண்டு தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 6 மாதங்கள் முன்பாக 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்த தொகையை திமுக அரசு வழங்கியது. மீதமுள்ள 1.25 கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்காததால் ஏற்பட்ட எதிர்ப்பையும், வெறுப்பையும் சமாளிக்கும் வகையில் தான் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டிருக்கும் அப்பட்டமான வாக்குத் திருட்டு முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாக்குகளைத் திருடும் திமுகவின் பேராசைக்காகவும், மோசடிக்காகவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் உழவர்களின் நலன்களை பலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகிற்கே உணவு படைக்கும் கடவுள்கள் உழவர்கள் தான். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உழவர்களுக்குத் தான் திமுக அரசு துரோகம் செய்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்த ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெல் பயிர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை; கடந்த அக்டோபர் மாத மழையில் சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அதே வரிசையில் டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீட்டிற்கு பதிலாக ஏமாற்றம் தான் கிடைக்குமோ? என உழவர்கள் அஞ்சுகின்றனர்.

உழவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் ஏமாற்ற முயன்றால், திமுக அரசுக்கு எதிராக காவிரி பாசன மாவட்ட மக்கள் கொந்தளிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களின் உணர்வுகளையும், துயரத்தையும் அரசு புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம்

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்