Tamil News & polling
சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதிலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய் பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், "அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறிவிட்டு, அதைதர மறுத்துவிட்டார்கள். எனவே, கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிவிட்டார்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. கடலூரில் வரும் 9-ந் தேதி நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் ரகசிய ஓட்டெடுப்பையும் பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.
இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொள்கையுடன் இருக்கும் தி.மு.க. இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இருந்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாற்று சக்தியாக இருப்பதால், காங்கிரஸ் கட்சியும் அந்த ஒற்றை கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், தி.மு.க.வும் புது முடிவு எடுத்துள்ளது.
காங்கிரஸ் போனால் என்ன, தே.மு.தி.க.வை கூட்டணிக்கு கொண்டுவருவோம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 9 தொகுதிகள் வழங்க தி.மு.க. ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதுவும், பிரேமலதா, விஜய் பிரபாகரன் போட்டியிட குறிப்பிட்ட தொகுதியையும் ஒதுக்கித்தர முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறினால், கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகள் தி.மு.க.வுக்கு மிச்சமாகும். அதில், 9 தொகுதியை தே.மு.தி.க.வுக்கு கொடுத்துவிட்டு, கூடுதல் தொகுதிகள் கேட்கும் கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கலாம் என்றும் தி.மு.க. நினைக்கிறதாம். கூடுதலாக சில தொகுதிகளை தி.மு.க.வே கையில் எடுக்கவும் முடிவு செய்துள்ளதாம்.
மொத்தத்தில், அரசியலில் காங்கிரஸ் எடுக்கும் சில முடிவுகளை தி.மு.க. தனக்கு சாதகமாகவே அமைத்துக்கொள்கிறது.


விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai பாஜக அதிமுக BJP Tamil Nadu கனமழை தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் TTV Dhinakaran MK Stalin AIADMK மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ADMK சீமான் Thirumavalavan அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss செங்கோட்டையன் AMMK வடகிழக்கு பருவமழை Sengottaiyan Seeman டிடிவி தினகரன் PMK முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam Edappadi Palaniswami கைது Congress பாமக