கும்பமேளா மூலம் பிரபலமான மோனலிசா போஸ்லே, 18 வயதுக்குள்பட்டவர் என விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரின் கணவரான ஃபர்மான் கான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில், கடந்தாண்டு (2025) மகா கும்பமேளாவில் மணிமாலை வியாபாரியான மோனலிசா போஸ்லே அழகு நட்சத்திரமாக இணையத்தில் பிரபலமானார்.
இதையடுத்து, அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.இவர் முகநூலில் அறிமுகமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஃபர்மான் (25) எனும் இளைஞரைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோனலிசா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மோனலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளத்தின் நெய்யடிங்கராவில் உள்ள அருமனூர் நாயனார் கோயிலில் மோனலிசா போஸ்லேவுக்கும் முகமது ஃபர்மானுக்கும் மார்ச் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், தந்தையுடன் செல்ல தனக்கு விருப்பமில்லை எனவும், தனக்கும் தனது காதலனுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் திருவனந்தபுரத்தின் தம்பனூர் காவல் நிலையத்தில் மோனலிசா கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, அப்போது மோனலிசா 18 வயது நிரம்பியவர் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவரை முகமது ஃபர்மானுடன் செல்ல அனுமதித்தனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையத்தினர் நடத்திய விசாரணையில் மோனலிசா 2009 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்றும், 18 வயது பூர்த்தியடையாத அவர் திருமணத்துக்கான போலியாக பிறப்புச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச காவல் துறையினர் ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மோனலிசாவின் கணவரான ஃபர்மான் கான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோனலிசா 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று பிறந்தவர் என்றும், இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி அவரின் திருமணத்தின்போது அவருக்கு 16 ஆண்டுகள், 2 மாதங்கள், 12 நாள்கள் மட்டுமே ஆகியிருந்ததாக தேசிய பழங்குடியினர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கேரளம், மத்தியப் பிரதேச காவல் துறை தலைமை அதிகாரிகள் தில்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
« முந்தைய செய்தி (Previous)
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர்...அடுத்த செய்தி (Next) »
கணவன் கொலை: கொள்ளை நாடகமாடிய மனைவியின் கள்ளக்காதல்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: