POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

திருச்சி கிழக்கு... விஜய்யின் ஈர்ப்பு; திமுகவின் வியூகம்!

3 hours ago 13 ஏப்ரல் 2026 02:40 AM | views : 7

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொண்டு பெயர், எல்லைகள் மற்றும் பகுதிகளை மாற்றியமைத்துக் கொண்ட பேரவைத் தொகுதிதான் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி (141). தனது அடையாளச் சின்னமாக மலைக்கோட்டையை ஏற்றுக் கொண்டுள்ளது.


மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், தூய வளனார் ஆலயம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை உள்ளிட்டவை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளன.


மாநகராட்சியின் 8 முதல் 26 வார்டுகள் வரை, 33, 34, 35-ஆவது வார்டுகள் மற்றும் 37, 38, 43 என மொத்தம் 25 வார்டுகளை கொண்ட தொகுதி.தொகுதி நிலவரம்: 1952 முதல் இதுவரை இங்கு நடைபெற்ற 16 தேர்தல்களில் 9 முறை திமுக, 5 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளன.


கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர். மனோகரன் வெற்றி பெற்று, அரசு கொறடாவாக பதவி ஏற்றார். 2016-இல் அதிமுக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி என். நடராஜன் வசமானது இந்தத் தொகுதி. 2011, 2016 என அடுத்தடுத்து இருமுறை வெற்றிக்கனியைப் பறித்த அதிமுக, 2021-இல் தோல்வியைத் தழுவியது. திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார்.சமூக நிலவரம்: கிறிஸ்தவ வெள்ளாளர்கள், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள், யாதவர், பிள்ளைமார் மற்றும் பிற்படுத்தப்பட்ட பல சமூகத்தினரின் கணிசமான வாக்கு வங்கிகளைக் கொண்ட தொகுதியாக அமைந்துள்ளது.


எனினும் தொகுதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக வெள்ளாளர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களே உள்ளனர். 2026 தேர்தலில் களம் காணும் திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் என மூவருமே தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


நீடிக்கும் பிரச்னைகள்: பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீர்த் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதாரமின்மை என அடிப்படை பிரச்னைகள் ஏராளம். இத்தொகுதியின் எல்லைகளில் ஒன்றான சிந்தாமணி பகுதியில் இருந்து, மாநகராட்சிப் பகுதியின் கழிவுநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. மாநகராட்சியும் பாராமுகமாக உள்ளது. பலமுறை மக்கள் போராட்டங்கள் நடத்தியும் இன்னும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. காந்தி சந்தை இடமாற்றமும் கைகூடவில்லை.


களம் காணும் வேட்பாளர்கள்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய், திமுக சார்பில் இரண்டாவது முறையாக இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் க. ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் வி. கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் கே. ராஜா, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆர். இளங்கோவன், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செ. நந்தகுமார், சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆர். முத்துகுமார், தேசிய மகா சபா கட்சியின் ஆனந்த் செல்வராஜ், அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகத்தின் கே. விஜய், தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சீ. சுகுமார், விடியல் வளர்ச்சி பேரணியின் விஜய மோகனாஜி மற்றும் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். தவெக தலைவர் விஜய் களம் காண்பதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.


வேட்பாளர்களின் பலம், பலவீனம்: கட்சி தொடங்கியபோதே திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்ற பேச்சு எழுந்தது. இப்போது அது உறுதிபடுத்தப்பட்டு களத்துக்கு வந்துவிட்டார். ரசிகர்கள், தவெக தொண்டர்கள், இளம்தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் அளவிடமுடியாத ஈர்ப்பு விஜய்க்கு பெரிதும் பலம். இவர் வெற்றி பெற்றால் தொகுதி மக்களால் எளிதில் சந்திக்க முடியுமா?, அடிக்கடி தொகுதிக்கு வர முடியுமா?, இரு தொகுதியில் போட்டியிடுவதால் வெற்றிக்கு பிறகு எந்தத் தொகுதியை ராஜிநாமா செய்வார் என்ற கேள்விகள் விஜய்க்கு பலவீனம்.சென்னையைச் சேர்ந்தவர், தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் என்ற விமர்சனம் கடந்த 2021 தேர்தலின்போதே திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மீது முன்வைக்கப்பட்டது.


கடந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொகுதிக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினர் விமர்சனத்தையும் தற்போது எதிர்கொண்டுள்ளார். 5 ஆண்டுகளில் தான் செய்தது தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இனிகோ இருதயராஜ். திருச்சி மாவட்டத்துக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ள ரூ.26,000 கோடி திட்டங்கள் மட்டுமல்லாது, திமுகவின் அனைத்து சாதனை திட்டங்களையே தனக்கான பலமாக கருதி தொகுதியில் வலம் வருகிறார்.அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலரும், அதிமுக மாவட்டப் பொருளாளருமான க. ராஜசேகரன், தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயமானவர் என்பது பலம். அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுகவும் இப்போது உடன் வந்திருப்பது கூடுதல் பலம். இருப்பினும், தவெக தலைவர் விஜய், உறுதிபடுத்தப்பட்ட வாக்கு வங்கிகளை கொண்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள வலிமை மிக்க திமுக கூட்டணியின் செல்வாக்கு ஆகியவை அதிமுகவுக்கு சற்றே பின்னடவை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மருத்துவர் வி. கிருஷ்ணசாமி, மருத்துவ சேவை அளித்த வகையில் தொகுதியில் நன்கு அறிமுகம் உள்ளது. மேலும், கட்சியின் 8.2 விழுக்காடு உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு வங்கியும் பலம். கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் புடைசூழ அதிமுக, திமுக கூட்டணிகள் முன்னெடுக்கும் பிரசாரத்துக்கு முன்னால், நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் தனித்து வலம் வருவது, பிரசாரக் களத்தில் பின்னடைவாக அமைந்துள்ளது.விஜய்யை எதிர்கொள்ள திமுக வியூகம் அமைத்து களப் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் மேற்கொண்டார். அதிமுகவும் எளிதில் விடுவதாக இல்லை. அக்கட்சியின் பொதுச் செயலர் எப்பாடி கே.பழனிசாமி விரைவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.



தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஏற்கெனவே திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்துள்ளனர்.திமுகவின் வியூகத்தையும், அதிமுகவின் தேர்தல் கள அனுபவத்தையும் மீறி விஜய் வெற்றி பெறுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடே காத்திருக்கிறது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ADMK ANNAMALAI தவெக AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் கனமழை AIADMK PMK பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் CONGRESS தமிழகம் இந்திய அணி UDHAYANIDHI STALIN திருமாவளவன் கோவை கைது PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI COIMBATORE INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை தேவர் சீமான் வன்னியர் பிரதமர் மோடி OPS அமமுக கொலை THIRUMAVALAVAN KEERTHY SURESH ஓபிஎஸ் தமிழ்நாடு மதுரை நெல்லை ASSEMBLY ELECTIONS NELLAI தென்காசி AJITH TAMIL ACTRESS திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் விடுமுறை பாலியல் தொல்லை தமிழக சட்டசபை தேர்தல் அஜித் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM தூத்துக்குடி MADURAI கீர்த்தி சுரேஷ் CSK ELECTION COMMISSION மோடி PRIME MINISTER MODI SURIYA தீபாவளி BIGG BOSS TAMIL NORTHEAST MONSOON