சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

Published : 2 months ago       Views : 1749

சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

மத்திய அமைச்சரவையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் கருத்துகள் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.


கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் இதில் அதிமுகவை சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து தனது மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் கருதினார். ஆனால் மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது அது போல் இடம் கிடைக்கவில்லை.இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நிச்சயம் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை பெறுவது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்தார். இதற்காக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெற பாஜக கூட்டணி கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன. அதில் ஒருவர் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ். இவர் தனது மகனுக்கு வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார்.

ஆனால் பாஜகவின் சாய்ஸ் எல் முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோராக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.

மேலும் பாஜகவால் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தோற்றதற்கு அதிமுகதான் காரணம் என குற்றம்சாட்டி வருகிறார்கள். தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் கழித்து திடீரென ஏன் இப்படி ஒரு கருத்து என நீங்கள் நினைக்கலாம்.


விஷயம் இல்லாமல் இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் ஒன்றுபட்டு இருந்தாலும் அணிகளாகவே உள்ளனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள். சிவி சண்முகம் பேசியது எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை பேரில் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனை மட்டும் ஜெயிக்க வைத்துவிட்டார் என்றும் சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிட்ட அதிமுகவினர் வெற்றிக்கு ஓபிஎஸ் உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்ததாக சொல்லப்பட்டது.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேர்வு முதல் இருவரும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பிளான் செய்து சிவி சண்முகத்தை பாஜகவுக்கு எதிராக பேச வைத்துள்ளாரா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது.

Tags : எடப்பாடி பழனிச்சாமி     சி.வி.சண்முகம்     அமித்ஷா     ஓபிஎஸ்    

Recent News