தமிழக பட்ஜெட்: 2-வது நாளாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் பட்ஜெட் தயாரிப்பு குறித்து 2-வது நாளாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றபின் முதன்முதலாக தமிழ்நாடு சட்டசபை கடந்த மாதம் 18-ந்தேதி கூடியது. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், தற்போதைய திட்டங்களின் செயல்பாடு மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்ந்த ஆலோசனைகள் நடைபெற்றன.


இந்த நிலையில், பட்ஜெட் தயாரிப்பு குறித்து 2-வது நாளாக இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் தலைமையில் 22-ந்தேதி வரை துறை வாரியான அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel