ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கக் கோரி, 3 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் சீர்மரபினர் (DNC) உள்ளிட்ட பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளது போல, பொதுப்பிரிவினருக்கும் இந்த தகுதி மதிப்பெண் வரம்பைக் குறைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தகுதி மதிப்பெண் குறைப்பு விவகாரத்தில் தமிழக அரசு தனது இறுதி முடிவை வரும் 24ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற விரும்புபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த தகுதி மதிப்பெண் சலுகை கோரிய வழக்கும், அதன் மீதான உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையும் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel