இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்.. நாட்டு மக்களுக்கு சோனம் வாங்சுக் அழைப்பு
நாளை நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கல்வியாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் லடாக்கில் இருந்தபடி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியான அவ்வீடியோவில் பேசும் அவர், அரசியல் சீர்திருத்தத்தித்தை மேற்கொள்ள இந்தியாவின் இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுயநலமற்ற, பயமில்லாத நற்பண்புகளுடையவர்களை தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த சுதந்திர தினத்தில், எனக்கு உங்களின் உதவி வேண்டும். இந்தியாவுக்கு ஒரு அமைதியான புரட்சி தேவை. 2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு மதிப்புமிக்க நாடாக மாறுவதற்கு நாட்டின் தலைவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்படுகிறார்கள் என்பதில் அந்த புரட்சி நிகழ வேண்டும்" என அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "குற்ற வழக்குகளை கொண்ட அரசியல்வாதிகள் நாட்டின் நம்பகத்தன்மையை இழந்துவருகிறார்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் கால் வாசி பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. நம்பிக்கை பற்றாக்குறை தான் நாட்டின் மிகப்பெரிய பற்றாக்குறையாக மாறியுள்ளதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
நாடு நெடுகிலும் உள்ள மக்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க விரும்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடியவர்களாக யார் யாரை அவர்கள் கருதுவதாகவும் நான் கேட்டறிய விரும்புகிறேன்.
இங்கே லடாக்கின் தொலைதூரத்தில் அமர்ந்துகொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட தகுதியானவர்கள் யார், அவர்களை எப்படி கண்டறிவது என்பது எனக்கு தெரியவில்லை.
எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் அவ்வாறு யாரை மக்கள் பணிக்கு தகுந்தவர்கள் என கருதுகிறீர்களா அவர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நாம் ஒன்றுசேர்ந்த்து, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தை (விடுதலை இயக்கத்தை) தொடங்குவோம். இந்த செய்தியை முடிந்த அளவு மக்கள் தத்தமது மொழிகளில் பெயர்த்து கூடியமட்டும் பரவச் செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் போராடிய மாணவர்கள் - இளைஞர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் ஆவார். அவரின் உடல் எடை 10 கிலோவுக்கு மேல் குறைந்தது.
டெல்லி போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 20 நாடாளுமன்றம் பேரணி சென்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிய மாட்டோம் என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து வாக்குறுதி அளித்த பிறகே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
தொடர்ந்து சிஜேபி போராட்டத்தின் அழுத்தத்தால் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.