பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி: நினைவு கூர்ந்த அஜித் தோவல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, அதற்கு காரணமானவர்கள் பூமி, வானம் அல்லது நரகம் என எங்கிருந்தாலும் அவர்களை பின்தொடர்ந்து அழிக்குமாறு பிரதமர் மோடி தங்களிடம் கூறியதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

டிஸ்கவரி சேனலில் நேற்று வெளியாகியுள்ள ஆவணத் தொடரான இரண்டு பாகங்கள் கொண்ட “Declassified: Operation Sindoor” நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூரில் நடந்த 88 மணி நேர ராணுவ நடவடிக்கையின் நோக்கம், எதிரி முகாம்களை குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முகாம்களை அழிப்பது தான் என்று கூறினார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அஜித் தோவல் முதன் முதலாக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “பஹல்காம் தாக்குதல் நடந்த போது, பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார்.

பிரதமர் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தை தொடர்ந்து, சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு திரும்பினார். அப்போது இந்திய விமான நிலையத்திலேயே, பிரதமருடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடைபெற்றது.

முதலில் பிரதமர் மோடி, இந்த தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள விரும்பினார்.

அப்போது அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘இதை செய்தது யார்? இதற்கு பொறுப்பானவர்கள் யார்? குற்றவாளிகள் யார் என்பது நமக்கு மிக தெளிவாக தெரிய வேண்டும். அது உடனடியாக வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

மேலும், ‘நாங்கள் அவர்களை துரத்தி செல்வோம். அவர்கள் பூமியில் இருந்தாலும் சரி, வானத்தில் இருந்தாலும் சரி, நரகத்தில் இருந்தாலும் சரி. எங்கிருந்தாலும் அவர்களை மன்னிக்கமாட்டோம்’ என்பதுதான் பிரதமரின் செய்தியாக இருந்தது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது பயங்கரவாதிகளுக்கு எதிராக திறம்பட நடவடிக்கை எடுக்க தவறுவதோ எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று என்பதை பாகிஸ்தான் ராணுவம் உணர வேண்டும் என நாங்கள் விரும்பினோம்.

ஒருமுறை ஒரு காரியம் தொடங்கிவிட்டால், நமது தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க எல்லை வரை செல்ல நாங்கள் தயாராக இருந்தோம்.

அதற்கு எல்லையே இல்லை, கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்.

ஆபரேஷன் சிந்தூர் உயிர்ப்புடன் இருக்கிறது என்று பிரதமர் கூறும்போது, கடைசி பயங்கரவாதி ஒழிக்கப்படும் போதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் முடிவடையும் என்பதே பிரதமரின் நோக்கமாக இருந்தது.

நமது உளவு அமைப்புகளுக்கு நன்றி. அவர்கள் மிகக் குறுகிய நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால், எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது,” என்று அவர் கூறினார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel