ஹார்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்து ஈரான்-ஓமன் முக்கிய பேச்சுவார்த்தை
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு குறித்து விவாதிக்க, ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி நேற்று (செவ்வாய்க்கிழமை) தெஹ்ரானில் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்தார்.
குறுகிய நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் "கூட்டு தற்காலிக வழித்தடம்" மற்றும் நீர்வழியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இரு நாடுகளின் கூட்டு முயற்சி ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர கப்பல் வழித்தடத்தை அமைப்பது மற்றும் நீரிணையின் எதிர்கால நிர்வாகம் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவது ஆகியவற்றை நோக்கி ஈரான் மற்றும் ஓமன் தொடர்ந்து தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அந்த அறிக்கை கூறியது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்குவதற்கு முன்பு, உலக வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.
உருவாகி வரும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு ஓமன் "தடையாக இருந்தால்" அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஓமன் கடற்கரைக்கு அப்பால் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் இயந்திரம் செயலிழந்ததாக, பிரிட்டிஷ் ராணுவத்தின் 'ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக அமைப்பு' (UKMTO) தெரிவித்தது. கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. அந்த நீர்வழியின் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட, அங்கே செல்ல முயலும் கப்பல்கள் மீது ஈரான் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுண்டு; இருப்பினும், திங்கள்கிழமை நடந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஈரானிய துறைமுகங்களுக்கு தடை விதித்திருந்த சமயத்தில் அமெரிக்காவும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel