விநாயகர் சிலையுடன் தங்கச்சங்கிலியை மறந்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி!
நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62) என்ற ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்துள்ளார்.
மேலும், அந்த விநாயகர் சிலைக்குத் தனக்குச் சொந்தமான 1½ பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான நேற்று, வீட்டில் இருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ராமமூர்த்தி முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை 9.30 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள உப்பனாற்றுக்கு அவர் சென்றார்.
அங்கு உப்பனாற்றுப் பாலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து இறுதிப் பூஜைகளைச் செய்த அவர், பக்தி பரவசத்தில் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியை எடுக்க மறந்தார். நகையுடன் சேர்த்தே விநாயகர் சிலையை அப்படியே தூக்கி ஆற்றில் வீசினார்.
சிலையைத் தண்ணீரில் வீசிய சில நிமிடங்களுக்குப் பிறகுதான், தங்கச்சங்கிலியைக் கழற்றாமல் சிலையோடு சேர்த்து ஆற்றில் வீசிவிட்டோமே என்ற அதிர்ச்சி உண்மை ராமமூர்த்திக்கு தெரியவந்தது.
இதனால் பதறிப்போன அவர், உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இறங்கி நகையைத் தேடத் தொடங்கினார்.
இதுகுறித்து கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மாலை 6.00 மணி வரை சுமார் 8½ மணி நேரம் நீடித்தது.
ஆற்றின் நீரோட்டம் மற்றும் சேறு காரணமாக, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடியும் விநாயகர் சிலையோ அல்லது அதனுடன் சென்ற 15 பவுன் தங்கச்சங்கிலியோ கிடைக்கவில்லை.
தான் தவறுதலாக நகையைத் தொலைத்த இடத்தையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி, மாலை வரை நகை கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் வீடு திரும்பினார்.
மறதி காரணமாக விநாயகர் சிலையுடன் 1½ பவுன் தங்க நகையை ஆற்றில் வீசிய சம்பவம் கடலூர் பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel