நாடு முழுவதும் வழக்கம்போல் செயல்பட்ட வங்கிகள் - வாடிக்கையாளர்கள் நிம்மதி
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டுமென்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி, இன்று முதல் வருகிற 30-ந் தேதிவரை வேலைநிறுத்த போராட்டத்தை வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனால் வங்கிச்சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமையில் வங்கிகள் முழுநேரமாக செயல்பட்டன.
இந்நிலையில் நேற்று இரவு இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தது. இதனை தொடர்ந்து இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல செயல்பட்டன. காலை 10 மணிக்கெல்லாம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு வந்தனர். பணம் எடுத்தல், பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel