Tamil News & polling
1957 செப்டம்பர் 14 கீழத்தூவவில் ஐவர் போலீசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கீரந்தை, உளுத்திமடை, மழவராயனேந்தல் என்று பல கிராமங்களிலும் சனங்கள் போலீசாரால் சுட்டுப் படுகொலை செயப்பட்டனர். இந்தப் படுகொலைகள் அனைத்தும் கருணை மிகு கர்ம வீரர் காமராசர் ஆட்சியிலே தான் நடந்தது . மொத்தம் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏன் இந்தப் படுகொலை . எதற்காக காக்கை குருவி போல் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒற்றை வரியில் சொல்வதென்றால் இவர்கள் காங்கிரசுக்கு எதிரானவர்கள். காமராசருக்கு எதிரானவர்கள். இவர்கள் அனைவரும் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 14 பேர் மறவர்கள். இருவர் அகமுடையார். ஒருவர் அரிசன் - குடும்பர். இந்த அரச பயங்கரவாதத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
முதுகுளத்துார் சமாதான மாநாடு முடிந்த மறுநாள் 1957 செப்.11 ம் நாள் இரவு காங்கிரஸ்காரரான இமானுவேல் கொலை செய்யப்படுகிறார். இதையொட்டி கலவரம் வெடிக்கும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். கலவரம் நிகழ்த்தப்பட்டால் அதைக் காரணமாக வைத்து பசும்பொன் தேவரை கைது செய்ய காமராசர் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தப் படுகொலைக்கும் தேவருக்கும் சம்மந்தம் இல்லை என இமானுவேலின் சகோதரர் துரைராஜ் பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் 1985 வரை அந்தப் பகுதியின் பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகியாகவே இமானுவேலின் சகோதரர் துரைராஜ் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இமானுவேலின் மைத்துனர், அமிர்தம் கிரேசு அம்மையாரின் சகோதரரும் 80கள் வரை பார்வர்ட் பிளாக் கட்சியில் பணியாற்றிக் கொண்டு தான் இருந்தார்.
இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.
இன்ஸ்பெக்டர் “ரே” என்பவரை கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.
கீழத்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் “ரே” அமைதியாக இருந்த கீழத்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து, வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான்.
முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் என்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் “ரே” தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.
அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ…? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.
என்ன நடந்தது அங்கே…? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் “ரே” , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த ஐவரும் பிணமாக, ரத்த வெள்ளத்தில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் போல் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.
அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன…? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை…? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர். இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத பரிசோதனை நடத்திய பின் ரகசியமாய் போலீசாரே எரித்து விட்டனர். கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை…? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலீசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலீஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்த விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார். இவர் பார்வர்ட் பிளாக் தொண்டர்.
மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, ” உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்” என்று அவர்களிடம் போலீசார் கூறினர்.
அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலீசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலீஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்…? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்.
கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர். இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா…? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்தக் கொலைகளைச் செய்ததற்காக இன்ஸ்பெக்டர் ரேவிற்கு காங்கிரஸ் கட்சி பொற்கிழி வழங்கியது. இதே இன்ஸ்பெக்டர் "ரே " தான் கேரளாவில் கண்ணனூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளைப் படுகொலை செய்தவன்.
இந்தப் படுகொலைகளனைத்தும் ஏழைப் பங்காளர் காமராசர் ஆட்சியிலே, அவரது ஆணையின் பேரிலேயே நடைபெற்றது. படுகொலைகள் காமராசர் ஆட்சியில் புதிதல்லவே! இந்தக் கொலைகளுக்கு முன்னால் 1957 ஜனவரியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய வால்பாறைத்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஐவரையும் சுட்டுக் கொன்றது காமராசரின் கருணை மிகு ஆட்சி.
அரசியல் செல்வாக்கையும் , ஆட்சியதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு எதிர்க் கட்சிகளை நசுக்கும் கொடிய ஆட்சியாக காங்கிரஸ் காட்டுத் தர்பார் நடத்தியது. அந்தப் பகுதியிலே பார்வர்ட் பிளாக் செல்வாக்கைக் குறைப்பதற்கும், பசும்பொன் தேவரின் மீது பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
படுகொலை செய்யப்பட்டவர்கள் :
கீழத்தூவல் படுகொலை 1957 செப் - 14
1. வழிவிட்டாத்தேவர் மகன் தவசி யாண்டித்தேவர்
2. கருப்பசாமித்தேவர் மகன் சிவமணித்தவர்
3. முனியாண்டித் தேவர் மகன் சித்திரை வேல் தேவர்
4. ராமசாமித்தேவர் மகன் ஜெகநாதத்தேவர்
5. சோலை முனியாண்டித் தேவர் மகன் முத்துமணித்தேவர்
கீரந்தைப்படுகொலை செப் - 17, 1957
1. குருவலிங்கத் தேவர் மகன் குமாரசாமித்தேவர், சாத்தங்குடி
2. வெள்ளைச்சாமித்தேவர் மகன் ஆறுமுகத் தேவர், அரியநாதபுரம்
3. தவசியாண்டித் தேவர் மகன் சேதுத் தேவர், அரியநாதபுரம்
4 . முனியாண்டிக் குடும்பன் , கடுகு சந்தை
5. வேலுச்சாமித்தேவர் மகன் குருநாதர் தேவர், கீரந்தை (மருத்துவமனை சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் இறந்தார்)
உளுத்திமடை படுகொலை, செப் 18, 1957
1. முத்துச் சாமித்தேவர் மகன் கருப்பசாமித்தேவர்
காமராசரின் அரச பயங்கரவாதத்திற்கு பலியான அப்பாவி மக்களுக்கு வீர வணக்கம்.
மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060
குறிப்புதவி நூல்கள் :
முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத் தேவர். ஏ.ஆர். பெருமாள்
பொக்கிசம், க. பூபதிராஜா

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress