INDIAN 7

Tamil News & polling

ரெயில் விபத்தின் பின்னணியில் சதி இல்லை- விசாரணையில் தகவல்

18 அக்டோபர் 2024 04:28 AM | views : 730
Nature

சென்னை:

சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த 11-ந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. மெயின் பாதையில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் பாதையில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.

விபத்து நடந்த பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். தண்டவாளம், சிக்னல், ரெயில் நிலையத்தின் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்பட சிக்னல் மற்றும் இயக்க பிரிவுகளில் அவர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர், சிக்னல் நிலை மேலாளர்கள் உட்பட 13 பிரிவுகளை சோ்ந்த 30 போிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தின், சென்னை கோட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் 15 பேரிடம் விசாரணை நடந்து முடிந்தது.

2-வது நாளாக எஞ்சிய 15 பேரிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான 3 பேர் குழு, தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை ரெயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உட்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

2 நாட்கள் நடந்த இந்த விசாரணையில், பாகுமதி ரெயிலின் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், ரெயில் மேலாளர், சரக்கு ரெயிலின் ஓட்டுநர், ரெயில் மேலாளர், கவரைப்பேட்டையில் பணியில் இருந்த நிலைய மேலாளர், இந்த மார்க்கத்தின் போக்குவரத்து ஆய்வாளர், மூத்த என்ஜினீயர், கேட்கீப்பர், விபத்துக்குள்ளான ரெயிலின் டிக்கெட் பரிசோதகர் உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கையை அடுத்த 10 முதல் 15 நாட்களில் ரெயில்வே வாரியத்திடம் அளிக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ரெயில்வே மூத்த அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு ஒன்று விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி கூட்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

அதில் மெயின் பாதையும், லூப் பாதையும் சந்திக்கும் இடத்தில் ரெயில் தடம் புரண்டிருக்கலாம் எனவும், அதன் மூலம் இந்த மோதல் நடந்திருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

அதேநேரம் விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எதையும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்த சம்பவத்தில் சதி இருப்பதற்கான சாத்தியம் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த கூட்டு அறிக்கை மூலம் விபத்துக்கான உறுதியான காரணத்தை கூற முடியாது எனக்கூறிய அவர்கள், எனினும் இந்த அறிக்கையின் அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இறுதி விசாரணை அறிக்கையை தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்