INDIAN 7

Tamil News & polling

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

03 ஜூன் 2025 11:32 AM | views : 1835
Nature

கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையுடன் பேச்சுவாரத்தை நடத்தும் வரை தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடப்போவதில்லை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் ஜூன் 5 அன்று வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து வந்ததாக கமல் ஹாசன் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபை எச்சரிக்கை விடுத்தது. கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

கர்நாடகத்தில் தக் லைஃப் பட வெளியீட்டின்போது பாதுகாப்பு கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல் ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டால் முடிவுக்கு வந்துவிடும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்து வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபைக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியிருந்தார். அதில், "தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது வேதனையளிக்கிறது. ராஜ்குமார் குடும்பத்தினர் குறிப்பாக ஷிவ ராஜ்குமார் மீதான உண்மையான பாசத்தின் வெளிப்பாடாகவே அவ்வாறு பேசினேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதைத் தான் கூற முற்பட்டேன். எந்த வகையிலும் கன்னட மொழியைச் சிறுமைப்படுத்துவது என் எண்ணம் இல்லை. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் பற்றி பேச்சோ விவாதமோ இல்லை. தமிழைப் போல கன்னடத்திலும் பெருமைக்குரிய எழுத்து மற்றும் கலாசார மரபு இருக்கிறது. இதை நீண்ட காலமாக நான் போற்றியிருக்கிறேன்" என்று கமல் ஹாசன் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபைக்கு எழுதிய கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு தேவையில்லை என்று கமல் தரப்பில் வாதிடப்பட்டது. ஏன் அகம்பாவத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதில் அகம்பாவம் எதுவும் இல்லை என கமல் ஹாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

கலையும் பட வெளியீடும் காத்திருக்கலாம், வழக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கலாம் என்று கமல் ஹாசன் தரப்பில் முன்வைக்கப்பட்டது. மேலும், கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை தக் லைஃப் படத்தை வெளியிடப்போவதில்லை என்றும் கமல் ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, வழக்கை ஜூன் பிற்பகல் 3.30-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இதன்மூலம், தற்போதைய நிலையில் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 அன்று கர்நாடகத்தில் வெளியாகாது என்பது உறுதியாகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்