Tamil News & polling
சென்னை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் தி.மு.க. அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் தி.மு.க. அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை அரசால் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியல்படி தேடித் தேடி நடத்த வேண்டும்; ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை அனைத்து வீடுகளிலும் மேற்கொள்ளலாம். மொத்தத்தில் பணிச்சுமை, அலைச்சல் ஆகியவை சாதிவாரி கணக்கெடுப்புக்கும், நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும் ஒரே அளவிலானவைதான், இன்னும் கேட்டால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை இருக்காது.
தமிழக அரசின் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 55,706 பேரைக் கொண்டு அரசு நடத்தவுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு இதை விட 4 மடங்கு அதிகமாக சுமார் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்ட தாக்க சர்வேவுக்கு ரூ.43.52 கோடி செலவாகும் நிலையில், சாதிவாரி சர்வேவுக்கு ரூ. 300 கோடி செலவாகும். இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவுதான்.
இவை அனைத்துக்கும் மேலாக நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ள முடியும். இதே சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள முடியும். நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம்தான் திமுகவுக்கு இல்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகள் அம்பலமாகிவிடும் என்று தி.மு.க. அரசு அஞ்சுகிறது. அதனால்தான் இல்லாத காரணங்களைக் கூறி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. ஆனால், சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும்போது க்ண்டிப்பாக சாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஜய் Vijay DMK Chennai சென்னை TVK திமுக தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu திருமாவளவன் எடப்பாடி பழனிசாமி BJP ADMK MK Stalin AIADMK TTV Dhinakaran Thirumavalavan தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் சீமான் Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் AMMK வடகிழக்கு பருவமழை Sengottaiyan முக ஸ்டாலின் PMK Seeman வானிலை ஆய்வு மையம் டிடிவி தினகரன் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam VCK பாமக