INDIAN 7

Tamil News & polling

ஆன்லைன் ரம்மி.. ஆசைவார்த்தை அள்ளிவிட்டு அழைக்கும் பிரபலங்கள்.. ராஜ் கிரண் வேதனை

17 டிசம்பர் 2022 08:19 AM | views : 845
Nature

சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், "எல்லாமே என் ராசா தான்" என்று ஒரு படமே எடுத்தேன் ஆனால் இப்போது பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிக்கின்றனர் என நடிகர் ராஜ் கிரண் வேதனை தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கடந்த 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இந்நிலையில் அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மேலும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர் சரத் குமார் நடித்திருந்தார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ரம்மி ஓர் அறிவுப்பூர்வமான விளையாட்டு எனவும் தோனி, ஷாருக்கான் கூட தான் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள் என விளக்கமளித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகர் ராஜ்கிரண், “சீட்டாட்டம் என்பது, மிக மிக மோசமான சூது. அதனால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்த பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது. சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள்." என தெரிவித்தார்.



மேலும், “இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், ‘எல்லாமே என் ராசா தான்’ என்று, ஒரு படமே எடுத்தேன். அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தற்போது ‘ஆன்லைன் ரம்மி’-யை பயமில்லாமல் ஆடுகின்றனர்.  இந்த சமூக சீர்கேட்டிற்கு, பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு கூவிக்கூவி அழைக்கிறார்கள்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை நம் தமிழ்நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன.  உயிரோடு விளையாடும் இந்த விளையாட்டை தடுக்க தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியும், அதை செயல் படுத்த முடியாமல், முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

தன்னிச்சையாக இந்த பிரச்சினையை கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டை தடை செய்து, பொதுமக்களை காக்க வேண்டிய நீதிமன்றங்களே, “இது திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?  இல்லையெனில் இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட, மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள்” என கூறிகின்றனர். இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை” என வேதனை தெரிவித்தார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்