திருமண வரம் அருளும் புற்றுமாரியம்மன்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ளது, இயற்கை எழில் கொஞ்சும் கிராமமான பு.முட்லூர். இங்கு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமயத்தினரும் இங்கு வந்து வழிபடுவது இக்கோவிலின் சிறப்பாகும்.
இக்கோவிலில் உள்ள புற்றில் நாகம் உள்ளது. கோவிலில் புற்றுக்கு முன்னால் புற்றுமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலின் முன்னால் ஒரு நாகக்கன்னி கோவில் உள்ளது. இங்கு, திருமணத்தடை உள்ளவர்கள், நாக தோஷத்தால் திருமணமாகாமல் இருப்பவர்கள், நாகதேவதைக்கு 'திருமண மாங்கல்ய கட்டு என்ற பிரார்த்தனை நடத்துகின்றனர். மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை கட்டி, அதற்கு குங்குமம் வைத்து, பூ சாற்றி, அதை புற்றுமாரியம்மன் மடியில் வைத்து பிரார்த்தனை செய்து, அந்த திருமாங்கல்யத்தை கொண்டுவந்து நாக தேவதையிடம் மனமுருகி வேண்டி கட்டி செல்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பின்னர் கோவிலுக்கு தம்பதியாக வந்து, நாக தேவதை மீது கட்டியிருந்த திருமாங்கல்யத்தை பூஜை செய்து கழட்டி எடுக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட திருமணத் தடைகளும் அம்மன் அருளால் விலகி திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகின்றனர்.
வெளிநாடு செல்பவர்கள், இங்குள்ள புற்றிலிருந்து மண் எடுத்து அதை புற்றுமாரியம்மன் மடியில் வைத்து பிரார்த்தனை செய்து தன்னுடன் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பியவுடன், கோவிலுக்கு வந்து அந்த புற்று மணலை புற்று மாரியம்மனிடம் சமர்ப்பித்து விட்டு, அன்னையின் அருளால் தாங்கள் நல்லபடியாக தாயகம் திரும்பி விட்டோம் என்று நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
அதேபோல் வாகனங்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வோர், இந்த ஆலயத்தின் முன் வாகனத்தை நிறுத்தி புற்றுமாரியம்மனை வணங்கிவிட்டு புற்று மணலை எடுத்து தங்கள் வாகனத்தில் வைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். இதன்மூலம், தங்களுடன் வழித்துணையாக அம்மனே வருவதாக நினைத்து மனமுருகி செல்கின்றனர். மீண்டும் வீடு திரும்பியவுடன் அந்த மணலை இங்கு கொண்டு வந்து, அம்மனிடம் தாங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டோம் என்று கூறி அதை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த வழிபாட்டை இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்களும் மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் வெள்ளியன்று புற்றுமாரியம்மனுக்கு வெகுவிமரிசையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு சகல விதமான பிரச்சினைகளுக்கும் பிரார்த்திக்கின்றனர்.
மேலும் அன்றைய தினம், நாள் முழுக்க விரதம் இருந்து 'ஓம் சக்தி பராசக்தி' என்ற அம்பிகையின் திருநாமத்தை மனதில் வேண்டி, மாலையில் இக்கோவிலுக்கு வந்து ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினால் அன்று இரவு தங்கள் வீட்டில் அம்மனின் கொலுசு சத்தம் கேட்குமாம். இதன்மூலம், அம்மனை மனமுருக வேண்டி விரதம் இருக்கும் பக்தர்களின் வீட்டிற்கு அம்மனே நேரில் வந்து அருள்புரிவதாக கூறுகின்றனர்.
இங்கு பேச்சியம்மனுக்கும் தனிச்சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறும். இதில் வெளிமாவட்ட மக்களும் கலந்து கொள்கின்றனர். அம்மை நோயால் அவதிப்படுபவர்கள், இந்த அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை உடலில் தெளித்து, சிறிது உட்கொண்டால் அம்மை விரைவாக இறங்கி விடும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கின்றனர்.
கோவில், காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
சிதம்பரம் - கடலூர் பைபாஸ் சாலையில் சிதம்பரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பு.முட்லூரில் இக்கோவில் அமைந்துள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel