இந்திய விமானப்படைக்கு புதிய LCA Mk-1A ரக போர் விமானம் - ஆண்டு இறுதிக்குள் வழங்க ஹிந்துஸ்தான் முடிவு
இந்திய விமானப்படை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 83 போர் விமானங்களை வாங்குவதற்கு முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்தது.
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 2025-இல் 97 போர் விமானங்களை வாங்குவதற்கு இரண்டாவது கட்டமாக ஒப்பந்தம் செய்தது. மொத்தம் 180 எம்.கே-1ஏ ரக போர் விமானங்கள் ரூபாய் 1.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டன.
இதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்களை, 2024-இல் ஹிந்துஸ்தான் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அமெரிக்க நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், F404-IN20 என்ஜின்களை உரிய நேரத்தில் வழங்க தவறியதால், போர் விமானங்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இயக்குநர் கே.ரவி, போர் விமானத்தில் சரி செய்யவேண்டிய ரேடார் உள்ளிட்ட சில சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதிகட்ட ஆயுத ஒருங்கிணைப்பு சோதனை நிலுவையில் உள்ளதாகவும், சுமார் ஒரு மாதத்திற்குள் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, விமானம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 10 என்ஜின்கள் பெறப்பட்டுள்ளன; மேலும் 27 LCA Mk-1A விமானக் கட்டமைப்புகள் தயாராக உள்ளன.
எங்களால் நிச்சயமாக 10 விமானங்களை வழங்க முடியும். ஆண்டுக்கு 24 Mk-1A ரக விமானங்களை உற்பத்தி செய்யும் எங்கள் திறனைக் கருத்தில் கொண்டு, அந்தக் காலக்கெடுவுக்குள் எங்களால் அவற்றை வழங்க முடியும்.
என்ஜின்கள் கிடைப்பதை பொருட்படுத்தாமல் நாங்கள் உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை. என்ஜின்கள் வந்தவுடன் விமானங்களைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் வகையில், நாங்கள் விமானக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.
97 Mk-1A ரக விமானங்களில், உத்தம் AESA (செயல்திறன் மிக்க மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்படும் வரிசை) ரேடார் மற்றும் ஸ்வயம் ரக்ஷா கவச் (மின்னணுப் போர் அமைப்பு) உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு அமைப்புகள் இருக்கும்.
இரண்டாவது ஒப்பந்தத்தை நாங்கள் செயல்படுத்தும்போது, முதல் 83 விமானங்களில் உள்ள சுமார் 40 இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
விமானத்தின் உடற்பகுதிகள் இணைக்கப்பட்டு, விமானத்தின் கட்டமைப்பு தயாராக உள்ளது. 2027 மார்ச் மாதத்திற்குள் முதல் தரை சோதனையை நடத்த இலக்கு வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel