அனிதா ராதாகிருஷ்ணன் கைது: பொய் வழக்கால் கழகத்தை முடக்க முடியாது..!- உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 20-ந்தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, எம்எல்ஏவாக இருக்கும் ஒருவர் இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.

அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel