அமெரிக்காவின் வான் பாதுகாப்பை முறியடிப்பது எப்படி? உக்ரைன் போரில் இருந்து கற்றுக் கொண்ட ஈரான்
அணு ஆயுதம் விவகாரத்தில் ஈரான் மீது குற்றம்சாட்டி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் நேரடி போர் தொடங்கியது.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மேற்காசிய நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. அதோடு மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
பொதுவாக ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் சிறப்பாக இடைமறித்து அழித்துவிடும். தனது சக்கி வாய்ந்த வான்பாதுகாப்பு சிஸ்டமான பேட்ரியாட் (Patriot interceptor missiles) அமைப்பை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இது ஏவுகணைகளை துல்லியமாக இடைமறிக்கும். ஆனால், அதையும் மீறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு ரஷியாவிடம் இருந்து ஈரான் பாடம் கற்றுக் கொண்டுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 4 வருடங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வருகின்றன. உக்ரைனும் பேட்ரியாட் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை பயன்படுத்தி வருகிறது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா திடீரென சரிமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தும், அதுவும் ஒரே வகையான ஏவுகணை பயன்படுத்தாமல் பல விதமான ஏவுகணைகளை பயன்படுத்தும். அதுமட்டுமல்லாமல் ஏவுகணைகளுக்கு மத்தியில் டிரோன்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தும்.
இது வான்பாதுகாப்பு சிஸ்டத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்துவதால் வான் பாதுகாப்பு சிஸ்டம், சில டிரோன்கள் அல்லது ஏவுகணைகளை இடைமறிக்க தவறி விடுகிறது. இது உக்ரைனில் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
இதேபாணியில்தான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. வான் பாதுகாப்பு சிஸ்டம் தொடர்ச்சியாக மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை செலுத்தியதால், அமெரிக்காவன் வான் பாதுகாப்பு சிஸ்டம் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள முக்கியமான ராணுவ தளம், ஏவுகணைகள் ஏவு தளம் போன்றவற்றை தரைமட்டமாக்கி விட்டோம் என்று அமெரிக்கா சொன்னாலும், ஈரான் அவற்றை மிக விரைவாக சீரமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் தனது ராணுவ சொத்துக்களை பாதுகாக்க நிலத்தடி மற்றும் மறைவான இடங்களைப் பயன்படுத்துகிறது. அதன் துருப்புக்களும் மூத்த தலைவர்களும் நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு மறைவிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக்காக்ஸ் மலை என்று அழைக்கப்படும், பலத்த பாதுகாப்புள்ள நிலத்தடி தளத்தில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் சில பகுதிகளை சேமித்து வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. அது ஒரு மலைக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவிற்கு இந்த மோதலை மேலும் கடினமாக்குகின்றன.
வளைகுடா முழுவதும் உள்ள இடங்களைப் பாதுகாப்பதை மேலும் கடினமாக்க, அவர்கள் ரஷியாவின் தந்திரத்தை திறம்படப் பயன்படுத்தியுள்ளனர் என்று வியூக மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைவர் சேத் ஜி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.