விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்த்து கதறும் சின்னஞ்சிறுசுகள்.... அப்பா தண்ணீரில் போடாதீங்க பிளீஸ்
வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச்சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.
அழகிய வேலைப்பாடுகளுடன் விதவிதமாக வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் தூக்கிப்போடும் போது அது ஐதீகமாக தெரிந்தாலும், மனதில் லேசான கவலையும் தோன்றாமல் இருப்பதில்லை. கண் எதிரில் விநாயகர் சிலைகள் தண்ணீரில் உடைந்து நொறுங்கி சிதறுவது ஒன்றிரண்டு நாட்கள் மனக்கண் முன்பு வந்து செல்ல தவறுவதில்லை. அந்த உணர்வை பெரியவர்கள் வெளிக்காட்டுவதில்லை.
ஆனால் பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.
விநாயகர் சதுர்த்திக்காக சிறு பிள்ளையார் சிலைகளை வாங்கி சென்று வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். அப்போது அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் விளையாட்டு தனத்தோடு வழிபட்டாலும் அந்த சிலைகளோடு ஒன்றிவிடுகிறார்கள். பின்னர் கரைப்பதற்காக பூக்களால் அலங்காரம் செய்து சிலைகளை எடுத்து வந்து நீர்நிலைகளின் அருகில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். வீட்டில் நடக்கும் பூஜையை போல்தான் வெளியிலும் எடுத்து வந்து அப்பா-அம்மா பூஜை செய்கிறார்கள் என்று அதுவரை சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் சிலையை எடுத்து தண்ணீரில் போடப்போகும் போதுதான் உடைந்து நொறுங்கி விடுகிறார்கள்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒரு விநாயகர் சிலையை கரைக்க விடாமல் குழந்தை ஒன்று அடம்பிடித்தது. ஒரு வழியாக சிலையை கடலில் போட்டு திரும்பினாலும் ‘எனக்கு பிள்ளையார் சாமி’ வேணும்... என்று கண்ணீர் விட்டு அழுத குழந்தையிடம்,
“நீ எங்க செல்லக்குட்டித்தானே?”
“ம்”
“அப்போ அப்பா சொல்றதை கேட்பியா...”
“ம்”
“நம்ம செல்ல விநாயகரும் கடலில் குளித்துவிட்டு வந்து விடுவார்.. சரியா...?”
“அப்போ... நாம நின்னு கூட்டிட்டு போவோப்பா...”
“நாம வெயிட் பண்ண வேண்டாம்... அவர் வேகமாக வருவார்.”
நாம் வீட்டுக்கு போவதற்குள் அவர் வந்துவிடுவார் பாரேன் என்று அந்த குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள்.
ஆந்திர கடலோரங்களில் நடந்த காட்சிகள் மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரு குழந்தை விநாயகர் சிலையை கட்டித் தழுவியபடி ‘நான் விடமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. அந்த குழந்தையை சமாதானப்படுத்தி சிலையை எடுத்து சென்று கரைப்பதற்கு பெற்றோர் பெரும்பாடுபட்டனர்.
ஒரு குழந்தைக்கு தாவணி எல்லாம் போட்டு அழைத்து வந்திருந்தார்கள். அதுவரை உற்சாகமாக இருந்த அந்த குழந்தையும் விநாயகர் சிலையை கடலில் போடப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ‘பிளீஸ்பா... வேண்டாம்பா... வீட்டுக்கு கொண்டு செல்வோம்’ என்று சிலையை கட்டிப்பிடித்து கதறியது.
இன்னொரு குட்டிகுழந்தை அவளது தந்தை விநாயகர் சிலையை தூக்கியதும் கொண்டு செல்லவிடாமல் தடுத்து தன்னிடம் கொடுத்து விடும்படி கெஞ்சி அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. தாய் அந்த குழந்தையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டார். இன்னொரு குழந்தையின் சிறு பிள்ளைத்தனமான எதிர்ப்பையும் மீறி அந்த குழந்தையின் பெற்றோர் சிலையை கடலில் கொண்டு போட்டனர். அதை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத அந்த குழந்தையை சிறிது நேரம் சமாதானப்படுத்தவே முடியவில்லை. சிலை கரைக்க வந்திருந்த பலரும் அந்த குழந்தையை சமாதானப்படுத்த நீண்டநேரம் போராடினார்கள்.
விநாயகரோடு ஒன்றிவிட்ட குழந்தைகள் விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்தான் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel